வவுனியா யோசப் முகாம் – May 21, 2009

  • வவுனியா யோசப் முகாம் – May 21, 2009

    Posted by Tamil Mahan on October 21, 2022 at 3:22 pm

    https://www.facebook.com/100078332235323/posts/pfbid02tbcMNkpAc3WGRdiQfzkvPAkZfGa319WAZxprGW5FBoqxW6YbGLphoXkud7fAn6FVl/?sfnsn=mo

    மே 21, 2009

    கொடிய இரவு

    ஆளையாள் இனம் காணமுடியாத கும்மிருட்டு, பெரிய மலைகளிலிருந்து உருளும் பாறாங்கல்லாய் பயங்கரமான மனிதர்களின் கர்ச்சனைகள் மனதில் ஆழமாய் இறங்கின.

    அந்த சத்தங்களின் சிங்கள மொழியின் பொருள் நன்கு தெரியா விட்டாலும் அந்த ஒலிகளில் இருந்து வரும் வெப்பக் கீற்றுக்கள் உயிர்வரை சென்று சுட்டன.

    எங்கிருக்கின்றோம்,

    ஏன் பிடித்து வரப்பட்டோம் என்று தெரியாவிட்டாலும் இனி என்ன நடக்கப் போகிறது என ஊகிக்க முடிந்தது. .

    மரணபயம் அவர்களை அணுகவில்லை என்றாலும் ஒவ்வொரு அடிகளும் சாவை விட கொடூரமாக வலித்தன.

    கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை மாறாக இரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது

    கைகள் விலங்கிடப்பட்டு கிடந்தார்கள்.

    “வவுனியா யோசப் முகாம்” என்ற செய்தி அவர்கள் காதில் நுளையவே,

    முன்னர் அறிந்த அந்த வதை முகாமின் கொடூர நினைவுகள் அவளிற்கு தலையைப்பிய்த்தது.

    “ஆமியிடம் மட்டும் பிடிபட்டு விடாதே தங்கச்சி அவனைக் கண்டாலும் நிற்காமல் ஓடுங்கள்” பிரசன்னா அண்ணா (மாவீரன்) சுகந்திரபுரத்தில் வைத்து சொல்லிச் சென்றதும் நினைவில் வந்து பல்குழலாய் வெடித்தன.

    இப்போது என்ன செய்வது என்று எண்ணுவதற்கு எதுவுமில்லை

    அவள் கைகள் கூட ஆறுதல் தர மறுத்தன.

    அங்கு இருந்த நிமிடங்கள் எல்லாம் வருடங்களைப் போல் கொடூரமாய் கழிந்தன.

    இரும்பு சப்பாத்துகளால் தலை முதல் கால் வரை ஏறி ஆள் மாறி, மாறி மிதித்தார்கள்.

    பெரிய வெளிச்சத்தை முகங்களில் பாய்ச்சி மரநாய் கோழி பிடிப்பதைப் போல் ஆட்களை இனம் கண்டு ஒவ்வொருவராய் இழுத்துப் போனார்கள். இராணுவமும் இலங்கை புலனாய்வாளர்களும்..

    பிடிக்கப்பட்ட எல்லோரும் போராளிகளாய் இருந்தவர்கள் என்று சொல்ல முடியாது முள்ளிவாய்க்கால் வரை பயணித்த தமிழ் பெண்களும் இருந்திருந்தார்கள்.

    ஓவென கதறி ஆள இப்போது எந்த சக்தியும் இருக்கவில்லை இனி அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை துளியளவும் இல்லை,

    எந்த கேள்வியுமற்று அடித்து, உதைத்து பாலில் தொல்லைகளையும் மலிவாக செய்யத் தொடங்கி விட்ட அந்த இரவில் இலங்கை இராணுவ கொடூரர்களின் கட்டுப்பாடற்ற சித்திரவதைகளால் சிதைக்கப்பட்டு, துடிதுடித்துக் கொண்டிருந்தவர்களில் அருளும் ஒருத்தி

    இனி கேட்பதற்கு யாரும் அங்கிருக்கவில்லை சிரிப்பும், கனைப்பும், கும்மாளமுமாய் சீருடைதரித்த மிருகங்கள் மனித வேட்டைகளை நடத்தி மகிழ்ந்த இரவொன்றின் கதை இது

    அவள் பக்கத்தில் இருந்த பெண் ஒருத்தி அடி வாங்கி, வாங்கி திரும்ப, திரும்ப கதைத்தாள், கத்தினாள் இரக்கமற்ற இரும்பு கரங்கலோடு முரண்டு பிடித்தாள் “எல்லாம் முடிந்து போனபின் ஏன் அடிக்கிறான் தயவு செய்து விட்டு விடு எனது குழந்தை இப்போ தாய்ப்பாலுக்காக அழுது கொண்டிருக்கும்…

    ” நான் போராளி இல்லை, நான் ஓர் சாமாணியப் பெண்” என்றவளை

    ” நீயே ஒரு பன்னி வேண்டும் என்றால் சொல்லு

    உன் பால் குடிக்க பன்றி குட்டிகளை விடுறன்” என்றான் ஒரு இராணுவ மிருகம் அரை குறை தமிழில்,

    அந்த பெண் பதிலுக்கு திரும்ப கெஞ்சினாள் ” விட்டு விடு என் கணவரும் இறந்து விட்டான்” .

    “விசாரித்து விட்டு உடனே விடுவதாக சொன்னதால் இரண்டு மாதக் குழந்தையை பக்கத்தில் கொடுத்து வந்தேன்.

    என்னை ஏன் பிடித்தாய்” என்று கதறினாள்

    எங்கள் எல்லா மனங்களையும் நாறாய் கிழித்தன அவளது கெஞ்சல்கள் அந்த அரக்க மனங்களை அசைக்கவேயில்லை,

    எந்த நீதி தேவதையும் வான் இறங்கிவரவே இல்லை….

    “இனி தமிழர்கள் எங்கள் அடிமைகள் நாங்கள் எது வேண்டும் மென்றாலும் செய்யலாம் பெரிய மாத்தையா எல்லாம் சொல்லியாச்சு” என்றான்

    “நீ எதிர்த்து பேச முடியாது” என சப்பாத்து கால்களால் அவளது மார்பகங்களை மிதித்தான் வலிதாங்க முடியாது

    ஓ வென கதறியவளது வாயினுள் குப்பைகளை திணித்து மகிழ்ந்தான்,

    ” ஏய் கொட்டியாவை கூப்பிடு காப்பாற்ற வாறாங்களா என்று பார்ப்போம்”

    அருளாலும் எழுந்து இருக்கவே முடியவில்லை கைகள் வலியின் மிகுதியால் சோர்வடைந்தன

    நா வரண்டு தாகம் எடுத்து தவித்தது.

    அருளிற்கு இரண்டு குழந்தைகள் அவர்களைப்பற்றி மனம் அப்போது நினைக்கவில்லை

    “கடவுளே என்னை உடனே சுட்டு விடவேண்டும் ” என்று மனம் இரங்கி எல்லாக் கடவுளிடமும் வேண்டினாள் . .

    எட்டி உதைத்தார்கள் ,

    ஏறி மிதித்தார்கள் கேட்க யாருமற்று கலங்கி கிடந்தார்கள்.

    தமிழில் உள்ள அத்தனை கேட்ட வார்த்தைகளையும் சொல்லி காறி முகத்தில்

    துப்பினார்கள்.

    முழுவதும் நனைத்தபின் முக்காடு எதற்கு என்று மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் .

    மண்றாடினார்கள் மரணமே என்னை வந்து காப்பாற்றி விடு

    உடம்பில் ஒரு ஒட்டு துணி மட்டும் உயிர், மானம் பறிக்கப்பட்டு ,. கிழிக்கப்பட்டு கந்தலாய் கிடந்தது

    காலை சூரிய உதயத்திற்கு முன் இந்த உயிர் பிரிய மண்டியிட்டுக்கிடந்தாள்.

    இருள் முழுவதும் இரத்ததில் நனைந்து கொண்டது. ஆட்களை இனம் காணமுடியாவிட்டாலும் பெண்கள்தான் என அறியமுடிந்தது.

    உயிர் பிரியும் வலியை விட கொடுமையானது உரிமைகள் பறிக்கப்பட்டதன் வலி ஆதனால் அருள் உணர்வுகள் சாவடிக்ககப்பட்டு உணர்ச்சியற்ற நிலையி்ல் யடமாக கிடந்தாள்.

    இழப்பதற்கு எதுவும் இல்லாத போது எதைப்பற்றி சிந்திப்பது. மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைப் பார்வையிடுவது போல வந்த கும்பல் ஒன்று பெரு வெளிச்சத்தைப் அருளின் முகத்தில் பாய்ச்சி உறுதிப்படுத்திய பின் எதையொ சிங்களத்தில் பேசி அவளை இழுத்து சென்றவர்கள்.

    முன்பே வீங்கிப்போயிருந்த அவள் கன்னத்தில் தாறுமாறாய் அறைந்து விட்டு ஒரு வாகனத்தில் ஏற்றினார்கள்.

    எல்லாம் முடிந்து விட்டதாக நினைத்தாள். இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டாள்.

    அந்த வாகனத்தில் ஒட்டுனர் தன்னை சிஐடி என்று சொல்லிக்கொண்டான்

    4 ஆம் மாடிக்கு விசாரனை என்றான். அருளிற்கு எதுவும் விளவில்லை.

    சிங்கத்தின் வாயில் பிடிபட்ட புள்ளிமானிற்கு என்ன எதிர்பார்ப்பு இருக்க போகிறது….

    எதுவும் அவளிற்கு புரிய வில்லை என்னை விசாரிக்க என்ன உள்ளது இனி

    எனக் கேட்க மனம் பதைபதைத்தது ஆனாலும் கன்னத்தில அறைந்த முரட்டு கரங்கள் தந்த வலி இன்னும் காதில் விண் கூவியதால் மௌனமானாள்,.

    அந்த எண்ண நிஷப்தத்தை அறுத்துப் போட்டது அந்த ஆண் குரல் இது வரை சிங்களத்தில் கத்திய அந்த குரல் ” என்னை தெரிகிறதா” என்றது சரளமான தமிழில்.

    அந்த வார்த்தைகள்

    அருளிற்கு பேர் அதிர்வாய் காதைப்பித்தது

    ஆனால் மௌனம் கலைக்காது இருந்தாள்.

    வாகனம் ஆமை வேகத்தில் குண்டும், குழியுமான பாதைகளால் சென்றது,

    எந்த இடம் என தெரியவில்லை அருளிற்கு எதுவாக இருந்தாலும் என்ன விலங்கிடப்பட்ட கைகளுடன் தப்பிவிடவா முடியும் நடப்பதை கண்டு கொள்வோம்

    என எண்ணி முடிக்கவும் வாகனம் ஒர் குளக்கரையில் நின்றது.

    தன்னை சி ஐ டி எனக் கூறிக்கொண்டவன்

    பின்னால் விலங்கிடப்பட்ட அவளது கை விலங்கை கழட்டி விட்டபின் எதுவும் பேசாமல்

    ஓர் முழுச் சட்டையை கொடுத்து போடுமாறு சைகை செய்தான். அப்போதும் அருள் நினைத்தாள் தன்னை சுட்டு இந்த குளத்தில் போடப்போறான் ஆனாலும் கொஞ்சம் நல்லவன் தான் போல அம்மணமாக இல்லாமல் உடுப்பு தந்துள்ளான் அதுவே காணும்…… ஆனாலும்

    சிறிது வினாடியில் வாகனம் மீண்டும் புறப்பட்டது

    அப்போது அருளின் குழந்தையின் பெயர் சொல்லி விசாரித்தான்

    அவளது கணவரையும், கேட்கவே தயக்கமாகவும்

    உறுதியாகவும் தெரியாது என்றவளின் மனம் தடுமாறத் தொடங்கியது

    யார் இவன் என்று புரியவில்லை ஆனாலும் பிள்ளையின் பெயர் சொல்லுமளவில் எம்முடன் நெருக்கமானவனா? என்ற எண்ணங்கள் பல் குழலாய் வெடித்து சிதறின.

    “இன்னும் தெரியவில்லையா” இல்லை என்ற ஒற்றை சொல்லில் முடித்தாள்.

    ஒரு பங்குனி வெயில் கொழுத்திக் கொண்டிருந்த நாளேன்றில் (2005 ஆம் ஆண்டு) நன்கு தெரிந்த ஒருவரின் வாகனத்தில் கிளிநொச்சியில் இருந்த அருளின் வீட்டிற்கு விருந்தாளியாக இன்றி நோயாளியாக வந்தான். சின்னம்மை (chicken pox) நோயுடன் உடல் முழுவதும் தொப்பளங்கள், கடுமையான காச்சல்,என நோயின் வலியால் துடித்து கொண்டிருந்தவனை காட்டி “இவனை இரகசியமாக, பாதுகாப்பாக வீட்டில் வைத்து பராமரித்து மாறியவுடன் தகவல் தருமாறு சொல்லி சென்றார்,.

    அவனின் உடல் நிலை மோசமாக மாறியது

    அருள் மருத்துவ துறையை சேர்ந்தவள் என்பதால் நுணுக்கமாகவும், ஒரு தாயைப் போலும பதிணனந்து நாட்களாக வீட்டில் வைத்து பராமரித்து நன்கு தேற்றி புது தெம்புடன் அனுப்பி வைத்தவன் தான் இவன் என்ற உண்மை தெரித்த போது மனம் எரிமலையாய் பிழந்தது.

    இப்போது அவன் கம்மிய குரலில் சொன்னான் “நான் உங்களை பல நூறு பெண்புலிகளை கைது செய்திருக்கும் இடத்தில் விடப்போகிறேன் அங்கு தான் உங்களிற்கு இப்போ பாதுகாப்பு நீங்கள் எனக்கு செய்த அளவிற்கு என்னால் எதையும் செய்ய முடியவில்லை மன்னித்து விடுங்கள். புதிதாக போகுமிடத்திற்கு இங்கிருந்து வந்த தகவல் எதையும் சொல்லி விடாதீர்கள்’ என சொல்லிச் சென்றான்.

    அருள் பம்பைமடு பெண்கள் முகாமில் சேர்க்கப்பட்டு பின்னர் அங்கிருந்தவர்களை விடுவிக்கப்பட்டபோது அவளும் வெளியில் வந்தாள். ஆனாலும்

    இன்று உயிரிருந்தும் உறக்கமற்றவளாக வாழ்கின்றாள்.

    எண்ணற்ற விடைதெரியா கேள்விகள் அவள் மனதில்

    யார் இவன்?

    இன்றும் அவனது முகம் நினைவில்லை,

    பெயர் சரியாக தெரியாது.

    அவன் நல்லவனா?

    நல்லவனாக இருந்தால் என்னை மட்டும் ஏன் காப்பாற்ற நினைத்தான். அத்தனை அலறல் குரல்களும் இவன் இதயத்தை உருக்க வில்லையா?

    அல்லது அவனின் கையறுநிலையா?

    எனக்கு மட்டும் செஞ்சோற்று கடன் தீர்த்தானா?

    உறவுகளிற்கு என்ன ஆனது இன்னும் எப்படி எல்லாம் வதைத்தார்கள்.

    உயிருடன் திரும்பினார்களா? அல்லது வேறு கொண்று புதைத்தானா, காணாமல் ஆக்கப்பட்டார்களா?.

    யாரிடமும் பகிர்ந்து விட முடியாத வலிகள் வேதனையை விட வேறெதையும் தந்து விடப்படவில்லை என்று தெரிந்தும் சேமித்து கொள்கிறாள் ஏனெனில் இந்த உண்மைகளை நாம் கூறினால் அன்றி யார் அறிவார்.

    அருள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

    நன்றி,

    என் எழுதப்படாத நாட்குறிப்பிலிருந்து

    மிதயா கானவி

    Tamil Mahan replied 2 years, 2 months ago 1 Member · 0 Replies
  • 0 Replies

Sorry, there were no replies found.

Log in to reply.