உடைந்துபோன ஒப்பந்தமும், உறுதி தளராத புலிகளும்

  • உடைந்துபோன ஒப்பந்தமும், உறுதி தளராத புலிகளும்

    Posted by Vel on January 31, 2022 at 10:32 pm

    https://antonbalasingham.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

    Mar 1, 1998 | Articles (Tamil)

    விடுதலைப் புலிகள் மாசி, பங்குனி 1998

    பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துபோன இந்திய-இலங்கை ஒப்பந்தம் மீது இப்பொழுது புதிதாக ஒரு பிரேத பரிசோதனை நடைபெற்றிருக்கிறது. இந்தப் பரிசோதனையை நடத்தியிருப்பவர் முன்னாள் இந்தியத் தூதுவர் ஜே.என்.டிக்சிட். ‘கொழும்புப் பணி’ (Assignment Colombo) என்ற தலைப்பில் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் இந்நூல், ஒப்பந்தம் பிறந்த காலத்திலிருந்து இறந்த காலம் வரையிலான ஒரு நீண்ட மரண விசாரணையை நடத்துகிறது.

    காலம் கடந்த விசாரணையாகவே இந்த நூல் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. ஒப்பந்தம் என்ற ராஜதந்திர நாடகம் அரங்கேற்றப்பட்டு ஒரு தசாப்தம் கழிந்து விட்டது. இந்த நாடகத்தின் பிரதான இயக்குனர்களும், கதாநாயகர்களும் இப்போது உயிருடனில்லை. அப்போது ஒப்பந்தம் கடும் சர்ச்சையைக் கிளப்பி, வடகிழக்கில் கொடும் யுத்தத்தையும், தெற்கில் பெரும் வன்முறைப் புயலையும் தோற்றுவித்தபோது வாய்மூடி மௌனம் சாதித்த டிக்சிட் அவர்கள், நீண்டகால இடைவெளியின் பின்னர் இந்திய வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களைத் திருப்பிப் பார்க்க முனைவது வேடிக்கையான விடயமே. பற்றற்ற நிலையில் நின்று, நிதானமாகச் சிந்தித்து, புறநிலைப் பார்வையுடன் தெளிவாக எழுதக் காலம் தேவைப்பட்டதாக அவர் காரணம் சொல்கிறார். இந்தக் காரணத்தை யாரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தியத் தலையீட்டால் எழுந்த அரசியற் சூறாவளி அடங்கிப் போகும்வரை அவர் காத்திருந்தார் என்பதுதான் உண்மை. இந்த அரசியற் சூறாவளியில் ஒப்பந்தப் பிதாமகர்கள் பலர் அள்ளுப்பட்டுச் சென்றதும் அவருக்கு வாய்ப்பாக அமைந்தது எனலாம்.

    நீண்ட காலம் தவமிருந்து, மாண்டுபோன நிகழ்வுகளை இரைமீட்டுப் பார்த்து, டிக்சிட் எழுதியிருக்கும் இந்நூல் வரலாற்று உண்மையின் சுயதரிசனமாக அமையவில்லை. உண்மைக்கு முகம்கொடுக்க அவர் தயாராக இல்லை. இந்திய ராஜதந்திரத்தின் இமாலயத் தோல்விகளுக்கு நியாயம் கற்பிக்கும் வாத விளக்கமாகவே அவரது நூல் அமையப் பெறுகிறது. இந்தியத் தலையீடானது தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாக எழுந்ததென்பதும், இந்தியாவினதும், இலங்கையினதும் நீண்டகால நலனைப் பேணுவதே அதன் நோக்கமாக இருந்ததென்பதும் அவரது வாதம். இந்த ‘உன்னதமான’ ராஜரீக முயற்சியைச் சுயநலம் கொண்ட தீயசக்திகள் குழப்பிவிட்டதாக அவர் ஆதங்கப்படுகிறார். இந்தியத் தலையீடு பற்றிய வரலாற்றுப் பதிவேட்டில் தவறுகளும், தப்பபிப்பிராயங்களும் பொதிந்து கிடப்பதாகக் குறிப்பிடும் அவர், சீரற்றுக் கிடக்கும் இந்த வரலாற்றுப் பதிவினைச் சீர்செய்து விடுவதே தனது எழுத்தின் நோக்கம் என்கிறார்.

    டிக்சிட்டின் நோக்கம் இங்கு தெளிவாகப் புலனாகிறது. விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற வாதமாக, தோல்வி கண்ட இந்திய ராஜதந்திர வரலாற்றுக்கு ‘வெற்றிமாலை’ அணிந்துவிட அவர் முயற்சிக்கிறார். இந்த முயற்சியால் சரிந்துபோன வரலாற்றுப் போக்கினை நிமிர்த்திவிடலாமென அவர் எண்ணுகிறார் போலும். இந்தியத் தலையீடானது 1983இலிருந்து 1990 வரையிலான வரலாற்றுக் காலத்தையும், அந்தக் காலத்தில் கட்டவிழ்ந்த பூகம்ப நிகழ்வுகளையும், திருப்பங்களையும் கொண்டது. அரசியல், ராஜதந்திர, இராணுவப் பரிமாணங்களைக் கொண்ட இந்நிகழ்வுகளும், அவற்றால் எழுந்த வரலாற்றுத் திருப்பங்களையும், மாற்றங்களையும், ஒரு தனிநபரின் சுயவிமர்சனக் குறிப்பேட்டால் மாற்றிவிட முடியாது. இக் காலவிரிப்பின் ஒரு காலகட்டத்தில் ராஜதந்திரக் காய்நகர்த்தும் சூத்திரதாரியாக டிக்சிட் செயற்பட்டார் என்பது உண்மை. ஒப்பந்தத்தின் சிருஸ்டி கர்த்தாக்களில் ஒருவராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார். தனது கொழும்பு ராஜதந்திரப் பணியின் உச்ச பெறுபேறாகப் பெற்றெடுக்கப்பட்ட ஒப்பந்தக் குழந்தை, குறைமாதத்தில் இறந்து போனது அவருக்கு ஆழ்ந்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த மரணத்திற்குக் காரண காரியத்தை ஆராயும் அவர், அதனை இந்திய ராஜதந்திரத்தின் தோல்வியாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இது அவரது நேர்மையின்மையைப் புலப்படுத்திக் காட்டுகிறது. அவரது ஆய்வு நூலின் தோல்வியும் அதுதான்.

    டிக்சிட்டின் நூல் கனமானதாக இல்லை. அரசியல் பிரச்சினைகள் ஆழமானதாக அலசப்படவில்லை. ஒரு பழுத்த ராஜதந்திரிக்கு இருக்க வேண்டிய விவேகமும், சாணக்கியமும் அவரது எழுத்தில் காணக்கூடியதாக இல்லை. சுயசரிதச் சித்திரமாகத் தனது கொழும்புப் பணியைச் சித்தரித்து, தனது உறவுகளையும், உரையாடல்களையும் விபரித்து, தான் உறவாடியவர்களின் தனிமனிதப் பண்புகளை விளக்கி, பத்திரிகைப் பாணியில், கால வரிசையில் நிகழ்வுகளை நகர்த்திச் செல்கிறார். இந்த விபரணச் சித்தரிப்பில் அடிப்படைப் பிரச்சினைகள் ஆழமாகப் பார்க்கப்படவில்லை. மாறாக ஆட்களும், அவர்களது ஆளுமைகளும், அவர்களது விருப்பு, வெறுப்புகளுமே மேலோங்கி நிற்கின்றன.

    அதிகாரத்திலுள்ள ஆட்களைப் பகடைக் காய்களாக நகர்த்தும் சதுரங்க ஆட்டமாக டிக்சிட்டின் ராஜதந்திரம் நிகழ்கிறது. பிரச்சினைகளின் புறநிலைகளைப் பார்க்காது, பிரமுகர்களைக் கைக்குள் போட்டுக் காரியத்தைச் சாதிக்க முயன்றதால்தான் இந்திய ராஜதந்திரம் தோல்வி கண்டது எனலாம்.

    தமிழரின் இனப்பிரச்சினையின் ஆழம், அகலம் பற்றியும், அப் பிரச்சினையானது தன்னாட்சி கோரும் தேசியப் போராட்டமாக வடிவம் எடுத்த வரலாற்றுப் புறநிலை பற்றியும் டிக்சிட் மட்டுமல்ல அன்றைய இந்தியத் தலைவர்களும் செம்மையாகப் புரிந்துகொள்ளவில்லை. அதே சமயம் சிங்கள தேசத்தில் விஸ்வரூபப் பரிமாணம் பெற்றிருந்த பேரினவாதத்தின் தமிழர் விரோதப் போக்குப் பற்றியும் அவர்கள் சரியாக எடைபோட்டதாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் தமிழ் – சிங்கள தேசங்கள் மத்தியில் கூர்மைபெற்றிருந்த முரண்பாட்டைத் தெளிவாகப் புரியாமல், பிளவுபட்டு நின்ற இரு தேசிய சக்திகளை, தனது புவியியல் நலனுக்காக ஒன்றிணைய நிர்ப்பந்தித்ததன் காரணமாகவே இந்தியத் தலையீடு தோல்வியில் முடிந்தது. இந்த வரலாற்று உண்மையை டிக்சிட் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். டிக்சிட்டின் பார்வையில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் புனிதமான நோக்கைக் கொண்டது. தமிழரின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் தீர்வு அதிலுண்டு என்கிறார். சிங்களவரின் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையில் ஒற்றையாட்சியும், நில ஒருமைப்பாடும் அதில் வலியுறுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். இப்படியாக, இவ்வொப்பந்தம் தமிழரதும், சிங்களவரதும் நலனைப் பேணும் ஒரு தலைசிறந்த உடன்பாடாக அமைந்திருக்கிறது என்பது டிக்சிட்டின் வாதம். இது மேலோட்டமான, சிறுபிள்ளைத்தனமான ஒரு கண்ணோட்டம். உருப்படியான அரசியல் அதிகாரம் எதுவுமற்ற மாகாணத் திட்டமானது, தனியரசு கோரிப் போராடி வரும் தமிழினத்தின் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தி விடும் என டிக்சிட் நினைப்பது அபத்தமானது. அதே சமயம் பிரதேச ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒற்றையாட்சியின் கீழும் தமிழருக்கு உரிமை வழங்கச் சிங்களத் தலைமை தயாராக இல்லை என்பதையும் அவர் உணரவில்லை. தமிழரின் தேசியப் போராட்டத்தின் அடிப்படைகள் பற்றியோ, தமிழர்கள் மீது சிங்கள-பௌத்த பேரினவாதம் கொண்டிருந்த விபரீதமான பகையுணர்வு பற்றியோ அவர் ஆழமாகப் புரிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த அறியாமை இருள் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் மட்டுமன்றி, டில்லி அரச நிர்வாகத்திலும் பரந்து கிடந்தது.

    இந்தியா இலங்கையில் தலையிட்டமைக்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறார் டிக்சிட்.

    முதலாவதாக, தீவிரமடைந்து வந்த தமிழரின் இனப்பிரச்சினை. தமிழர்கள் மிக மோசமான அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகி வந்தனர். இந்த ஒடுக்குமுறை இன அழிப்புப் பரிமாணத்தை எட்டியது. இதன் எதிர்வினையாகத் தமிழகத்தில் கொந்தளிப்பான அரசியல் நிலைமை தோன்றியது. ஈழத்தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்தது. இந்தியா தலையிடாது போனால் தமிழகத்தில் தமிழ்த் தேசியவாதம் மீண்டும் உயிர்பெற்றெழுந்து பிரிவினைவாதத்திற்கு வழிகோலியிருக்கும். இது பாரத நாட்டின் ஐக்கியத்திற்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக முடியும் என்கிறார்.

    இரண்டாவதாக, தமிழரின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் நோக்கில் ஜெயவர்த்தனா அரசு இந்தியாவுக்கு விரோதமான அந்நிய சக்திகளின் ஊடுருவல்களுக்கு இடமளித்து வந்தது. சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளிலிருந்து உதவியைப் பெற்று வந்தது. ‘அமெரிக்காவின் குரல்’ என்ற அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனம் சிலாபம் கடலோரமாகத் தளம் அமைக்க இடமளித்திருந்தது. திருகோணமலை எண்ணெய்க் குதங்களைத் திருத்தியமைக்கும் வேலைத்திட்டத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு கையளித்திருந்தது. இப்படியாக, அமெரிக்க வல்லரசு இலங்கையில் காலூன்றுவதற்கு ஜெயவர்த்தனா அரசு வழிவகுத்துக் கொடுத்தது. சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து நின்ற காலமது. இச்சூழலில் ரஸ்ய ஆக்கிரமிப்பை முறியடிக்க அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் கூட்டாகச் செயற்பட்டன. சோவியத் யூனியனின் நட்பு நாடு என்ற ரீதியில் இந்தியா மீது நெருக்குதல் கொடுக்கவும் இந்நாடுகள் முயன்றன. இந்த அந்நிய சக்திகள் இலங்கையில் ஊடுருவிக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தென்பிராந்தியத்தில் ஒரு ‘அழுத்த முனையை’ உருவாக்க முயன்றன. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது என்கிறார்.

    டிக்சிட் கூறும் இவ்விரு காரணங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும் போது, இந்தியா தனது சொந்த நலனைப் பேணவே இலங்கையில் தலையிட்டது என்பது தெட்டத் தெளிவாகிறது. இன அழிவை எதிர்கொண்டு நின்ற தமிழர்களுக்கு உதவி செய்து இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் நோக்குடன் இத்தலையீடு நிகழவில்லை. இலங்கையில் காலடி எடுத்து வைக்க, தமிழர் பிரச்சினையை ஒரு இறங்கு தளமாகவே இந்தியா பயன்படுத்தியது எனலாம். இன அழிவைத் தடுக்கும் ஒரு மனிதாபிமான நல்லெண்ண முயற்சியில் இறங்குவதாகச் சர்வதேச உலகிற்குக் காட்டிக் கொண்டு, தனது புவிசார் கேந்திர நலனை நிலைநிறுத்திக் கொள்ளவே இந்தியா இலங்கையில் குறுக்கிட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்த இணைப்பிலுள்ள விதிகள் இதனைத் தெளிவாகப் புலப்படுத்திக் காட்டுகின்றன. அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்திய நலனுக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசு தளம் அமைத்துக் கொடுக்கக் கூடாதென இவ்விதிகள் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

    இந்திய-இலங்கை ஒப்பந்தம் ‘சமத்துவத்தின் அடிப்படையில்’ இரு நாடுகளினதும் பரஸ்பர நலன்களைப் பேணுகிறது என்கிறார் டிக்சிட். இந்தப் பரஸ்பர நலன்கள் யாவை? இந்தியாவுக்கு விரோதமான அந்நிய சக்திகளின் ஊடுருவல்களை இலங்கை தடுத்து நிறுத்த வேண்டும். இது இந்திய நலனைப் பேணும். இதற்குப் பிரதிபலனாகத் தமிழரின் விடுதலைப் போருக்கு முடிவு கட்டி, தமிழரின் பிரிவினைப் போக்கை இந்தியா தடுத்து நிறுத்தும். விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து, மாகாணத் தீர்வை தமிழர்கள் மீது திணிப்பதன் மூலம் இது சாத்தியமாகும். இதனால் இலங்கையின் ஒற்றையாட்சி பலப்படும். அத்தோடு இலங்கையின் ஐக்கியத்திற்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் இந்தியா உத்தரவாதமளிக்கும். இவ்விதம் இலங்கையின் தேசிய நலனை இந்தியா பேணிப் பாதுகாக்கும். எனவே இந்திய-இலங்கை ஒப்பந்தமானது சாரம்சத்தில் இரு தரப்பினரதும் தேசிய நலன்களைப் பேணுவதாக அமைகிறது என விளக்குகிறார் டிக்சிட். இந்த விளக்கத்திலிருந்து இந்தியாவின் ராஜதந்திரத் தந்திரோபாயம் தெளிவாகிறது. தமிழரின் தேசிய நலனை விலையாகக் கொடுத்து, தனது நலனையும், சிங்களத்தின் தேசிய நலனையும் பேண முனைந்தது இந்தியா. தமிழரின் தன்னாட்சி உரிமையை இவ்வொப்பந்தம் சமாதிகட்ட முனைந்தது என்பதால்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒப்பந்தத்தை எதிர்த்தது. இவ்வொப்பந்தமானது இலங்கைத்தீவின் சுயாதீனத்தையும், இறைமையையும் கட்டுப்படுத்துகிறது என்பது ஜெயவர்த்தனாவுக்குத் தெரியாததல்ல. ஆயினும் அவர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடத் துணிந்தார். இலங்கையின் சுதந்திரம் பாதிக்கப்பட்டாலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழக்கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். இந்தியாவைப் பயன்படுத்தித் தமிழரின் தன்னாட்சிப் போருக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும். பின்னர் ஒப்பந்தத்தைச் செயலிழக்கச் செய்து இந்திய ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே அவரது திட்டம். ஜெயவர்த்தனாவின் தந்திரம் இந்திய ராஜதந்திரத்தை மிஞ்சி நின்றது என்பதை டிக்சிட் புரிந்து கொள்ளவில்லை.

    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்தை எதிர்த்தார் என்றும், பிரேமதாசா, லலித் போன்றோர் ஒப்பந்தத்தை முறியடிக்கச் சதி செய்தனர் என்றும், ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அமுல்படுத்த மறுத்தார் என்றும் ஒப்பந்தத்தின் தோல்விக்குக் காரணம் கற்பிக்கிறார் டிக்சிட். இந்த வாதம் தவறானது. ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளே ஒப்பந்தத்தின் தோல்விக்குக் காரணம் என்பதை ஏற்றக் கொள்ள மறுக்கும் டிக்சிட், எல்லோருக்கும் நன்மை பயக்கும் ஒரு நல்ல காரியத்தை எல்லோரும் சேர்ந்த கெடுத்து விட்டார்களே எனப் புலம்புவது கேலிக்கூத்தானது. இந்த ஒப்பந்தமானது இந்தியாவின் மேலாதிக்கப் பசியைத் திருப்திப்படுத்தியதே தவிர தமிழரையோ, சிங்களவரையோ திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. பிணக்குப்பட்ட இரு பூனைகளுக்கு அப்பத்தைப் பிரித்துக் கொடுப்பதாகக் கூறி, தான் பசியாறிய குரங்கின் கதைதான் இங்கு நினைவுக்கு வருகிறது.

    இரு நாடுகளது வெளியுறவையும், தமிழ்-சிங்கள தேசிய இனங்களின் நீண்டகால சிக்கலையும் தீர்மானிக்க முயன்ற ஒரு முக்கிய ஒப்பந்தம் வெகுசனக் கருதாடலுக்கு விடப்படாது, திரைமறைவில், அவசரமாக, இரகசியமாக செய்து கொள்ளப்பட்டது. இந்த உண்மையை மறுதலிக்கிறார் டிக்சிட். ஒப்பந்தம் பற்றி விடுதலைப் புலிகள் உட்பட எல்லாத் தரப்பினருடனும் ஆழமாக, விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டதாகக் கூறும் அவர், விசமத்தனமாக ஒரு பொய்யையும் புனைந்து விடுகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆரம்பத்தில் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக வாக்களித்துவிட்டுப் பின்னர் ஒப்பந்தத்தை எதிர்த்து நம்பிக்கைக் கேடு செய்தார் என்பது டிக்சிட்டின் குற்றச்சாட்டு. எந்தக் காலத்திலும், எந்தக் கட்டத்திலும் தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஒப்பந்தத்தை அவர் எதிர்த்து நின்றார் என்பதுதான் உண்மை. இது டிக்சிட்டுக்கு மட்டுமன்றி உலகத்திற்கே நன்கு தெரியும். ஒப்பந்தத்தை எதிர்த்து நின்றது மட்டுமல்லாமல் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வந்த இந்திய இராணுவத்திற்கு எதிராகவும் ஆயுதமேந்திப் போராடினார் என்பதும் உலகறிந்த உண்மை. இந்திய-இலங்கை ஒப்பந்தமானது தமிழரின் தன்னாட்சி உரிமைக்கு ஆப்பு வைக்கும் ஒரு அடிமைச் சாசனம் என்பது தலைவர் பிரபாகரனின் நிலைப்பாடு.

    1987 ஜுலையில் இந்திய உதவித் தூதர் பூரி யாழ்ப்பாணம் வருகை தந்து, ஒப்பந்தம் பற்றிப் புலிகளோடு கலந்துரையாடி, தலைவர் பிரபாகரனின் ஒப்புதலைப் பெற்று அவரை புதுடில்லிக்கு அழைத்து வந்தாரென இன்னொரு கட்டுக்கதையையும் அவிழ்த்துவிடுகிறார் டிக்சிட். உதவித் தூதர் பூரி யாழ்ப்பாணம் வருகை தந்தது உண்மை. ஆனால் அவர் ஒப்பந்தம் பற்றிப் புலிகளோடு கலந்துரையாடவில்லை. ஏதோ முக்கிய விடயமாகப் பாரதப் பிரதமர் சந்திக்க விரும்புவதாகப் பொய் சொல்லி, ஏமாற்றி, தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்துச் செல்லவே அவர் வந்தார்.

    புதுடில்லியில், அசோகா விடுதியில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில்தான் புலிகளுக்கு முதன் முதலாக ஒப்பந்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிமுகத்தைச் செய்தவரும் டிக்சிட்தான். ஒப்பந்தத்தில் நிறையக் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக் காட்டி, ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தார் தலைவர் பிரபாகரன். டிக்சிட் விளக்கங்கள் கொடுத்தார்; அழுத்தங்கள் கொடுத்தார்; மிரட்டியும் பார்த்தார். முடியவில்லை. தலைவர் பிரபாகரன் தனது நிலைப்பாட்டில் உறுதி தளராது நின்றார். பின்னர் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியுடனான சந்திப்பின் போதும் தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துத் தனது நிலைப்பாட்டில் இறுக்கமாக நின்றார். இறுதிவரை ஒப்பந்தத்தை அவர் ஏற்கவில்லை. இதுதான் உண்மை.

    இந்திய-இலங்கை ஒப்பந்தம் சம்பந்தமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி 4.8.1987 இல் சுதுமலையில் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரையிலிருந்து சில பந்திகள்:

    ‘‘திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும், இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசர அவசரமாக அமுலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் டெல்லி செல்லும் வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. பாரதப் பிரதமர் என்னை சந்திக்க விரும்புவதாகச் சொல்லி என்னை டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேள்விக்குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெட்டத் தெளிவாக விளக்கினோம்.

    இந்த ஒப்பந்தம் நேரடியாக எமது இயக்கத்தைப் பாதிக்கிறது; எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது; எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது; எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக, இரத்தம் சிந்தி, தியாகங்கள் புரிந்து, சாதனைகள் ஈட்டி, எத்தனையோ உயிர்ப்பலி கொடுத்துக் கட்டி எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை எம்மால் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது…

    தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதை நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன்…’’

    பத்து ஆண்டுகளுக்கு முன்னர், ஒப்பந்தம் கைச்சாத்தி ஒரு சில நாட்களின் பின்னர், தலைவர் பிரபாகரன் வெளியிட்ட பகிரங்கப் பிரகடனம் இது. ஒப்பந்தம் பற்றிய இவரது நிலைப்பாடு என்ன என்பது இக்கூற்றுக்களிலிருந்து தெளிவாகிறது அல்லவா?

    விடுதலைப் புலிகள் சம்பந்தமாகப் பல பொய்களும், புரட்டுக்களும் டிக்சிட்டின் நூலில் மலிந்து கிடக்கின்றன. சிறீலங்கா அரசின் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையால் தோல்வியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு அரசியல் இணக்கப்பாட்டிற்கு முன்வந்தது என்று ஒரு புரளியைக் கட்டவிழ்த்து விடுகிறார் டிக்சிட். இந்தத் தகவலைப் புலிகளின் சிங்கப்பூர் பிரதிநிதி ‘இந்து’ பத்திரிகை ஆசிரியர் ராமிற்குத் தெரிவித்தாராம். ராம் அதனை இந்திய அரசுக்கு அறிவித்தாராம். இந்தத் தகவலை நம்பியே இந்திய அரசு சிறீலங்கா அரசுடன் பேசியதாம். இந்தப் பேச்சின் பயனாகவே ஒப்பந்த யோசனைகள் பிறந்ததாம். இப்படியானதொரு புனை கதையை சோடிக்கிறார் டிக்சிட். யார் இந்தப் பூடகமான சிங்கப்பூர் புலி என்பதை அவர் சொல்லவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளிவராமல், வெளிநாடு ஒன்றில் பெயர் தெரியாத மனிதர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறும் தகவலை ஆதாரமாகக் கொண்டு இந்திய அரசு சமசரப் பேச்சுக்களில் இறங்கியதென்றால், இது ஒரு கேலிக்கூத்தான விடயமே. இந் நிகழ்வு இந்திய ராஜதந்திரத்தின் திறனாற்றலையே கேள்விக் குறியாக்குகின்றது. அன்று யாழ். மீதான இராணுவ நடவடிக்கையால் புலிகள் இயக்கம் ஆட்டம் கண்டுவிடவில்லை. வடமராட்சியில் மில்லரின் தற்கொடைத் தாக்குதலால் சிங்கள இராணுவம்தான் கதிகலங்கி நின்றது. இந்தத் தாக்குதலின் அதிர்ச்சியால் சிங்கள அரசுதான் பேச்சுக்குப் பணிந்து வந்தது. புலிகள் பயந்துபோய்ப் பணிந்து வந்தார்கள் என்பது டிக்சிட்டின் கற்பனையில் உதித்த கட்டுக்கதை.

    விடுதலைப் புலிகளின் இலட்சியம் தமிழீழமல்ல, ‘பெரும்ஈழம்’ என்கிறார் டிக்சிட். இலங்கைத் தீவின் வடகிழக்கும், தமிழ்நாடும், தென்கிழக்கு ஆசியாவின் தமிழ்ப் பிரதேசங்களும், மொரிசியஸ் தீவுமாக, அகன்று பரந்த தமிழ் இராச்சியம் ஒன்றைக் கட்டியெழுப்புவதே விடுதலைப் புலிகளின் இலட்சியக் கனவு என்கிறார். பெரும் ஈழமாக, அகன்ற தமிழ் சாம்ராஜ்யத்தைக் காட்டும் இந்தக் கருத்து வடிவம் புலிகளின் பரப்புரை ஏடுகளில் பூடகமாகச் சொல்லப்படுவதாகவும் குறிப்பிடுகிறார். இது டிக்சிட்டின் சொந்தக் கற்பனையா, அன்றி இந்திய மத்திய அரசின் ஆதாரமற்ற ஒரு பீதிக்கு இவர் எழுத்து வடிவம் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. இப்படியான கட்டுக்கதைகளை இவர் அவிழ்த்து விடவேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. இந்திய ராஜதந்திரத்தின் தோல்வியை நியாயப்படுத்த இப்படியுமா பொய் சொல்ல வேண்டும்?

    முன்பெல்லாம் தலைவர் பிரபாகரன் பற்றி மிகவும் இழுக்கான முறையில் எழுதியும், பேசியும் வந்த டிக்சிட்டிற்கு, பத்தாண்டு காலச் சுடலை ஞானத்தின் பின்பு ஒரு புதிய வெளிச்சம் ஏற்பட்டிருக்கிறது போலத் தெரிகிறது. ‘‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் நலனைப் பிரதிபலிக்கும் பலம் பொருந்திய அரசியல்-இராணுவ சக்தியாக எழுச்சி பெற்று நிற்பதற்குப் பிரபாகரனின் தலைமைத்துவம்தான் காரணம்’’ என்கிறார். தலைவர் பிரபாகரன் பற்றிக் குறிப்பிடும் பொழுது:

    ‘‘முதலாவதாகப் பிரபாகரனின் ஆளுமையையும், குணாம்சத்தையும் குறிப்பிட வேண்டும். அவர் கட்டுப்பாடுடைய ஒழுக்க சீலர்; எளிமையானவர்; ஈழத்தமிழ் மக்களின் விடுதலையில் ஆழமான பற்றுறுதி கொண்டவர். அவர் மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் அந்த மனிதரிடம் ஒரு உள்ளீட்டான இலட்சிய நெருப்பும், கொள்கை உறுதியும் உண்டு என்பதை மறுக்க முடியாது. போர்த்திட்டங்களை வகுப்பதிலும், போர் உக்திகளை அறிமுகம் செய்வதிலும் அவரிடம் இயற்கையாகவே இராணுவத் திறனாற்றல் இருக்கிறது. அவர் அரசியல் சுழியோட்டங்களையும் உன்னிப்பாக அவதானிப்பவர். அரசியல் நிகழ்வுகளைச் செம்மையாக மதிப்பீடு செய்து, அதற்கேற்ப காய்நகர்த்தும் மதிநுட்பம் உடையவர்…’’

    நூலின் இன்னொரு இடத்தில் தலைவர் பிரபாகரன் பற்றிக் குறிப்பிடும் பொழுது, தமிழீழத் தனியரசை உருவாக்கும் பிரபாகரனின் இலட்சிய உறுதியை எவராலும், எப்பொழுதுமே மாற்ற முடியாது என்கிறார் டிக்சிட்.

    இது தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு சரியான மதிப்பீடு. புலிகள் பற்றிப் பொய்களும், புனை கதைகளும் செறிந்து கிடக்கும் இந் நூலில் இப்படியான சில உண்மை வரிகளும் இருப்பது திருப்தியைத் தருகிறது. காலம் கடந்தாவது டிக்சிட்டிற்கு இவ்விதம் ஞானோதயம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்த விழிப்பு அவருக்கு ஏற்பட்டிருந்தால், இந்திய-புலிகள் உறவில் விழுந்த பல விரிசல்களையும், முரண்பாடுகளையும் ராஜதந்திரச் சாணக்கியத்துடன் தவிர்த்திருக்கலாம் அல்லவா?

    Vel replied 2 years, 9 months ago 1 Member · 0 Replies
  • 0 Replies

Sorry, there were no replies found.

Log in to reply.