ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகம் செய்தது யார்? ஏன் அவ்வாறு சொல்லப்படுகிறார்?

  • ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகம் செய்தது யார்? ஏன் அவ்வாறு சொல்லப்படுகிறார்?

    Posted by Tamil Mahan on March 13, 2023 at 6:01 pm

    https://ta.quora.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

    ஈழத்தமிழருக்கெதிராகத் துரோகமிழைத்தவர்கள் எனும் பட்டியலில் பலர் இருக்கிறார்கள். அவர்களின் துரோகத்தினால் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளின் தாக்கத்தினைப் பொறுத்து அவற்றின் பரிமாணத்தை அறிந்துகொள்ளலாம்.

    1. கருணா

    தமிழினத்தின் மாபெரும் துரோகியும் அவனது கூட்டமும்

    ஈழத்தமிழர்கள் சந்தித்த மிகப்பெரும் துரோகியென்று கூறும்போது என் மனக்கண்ணில் முதலில் வருவது கருணா அம்மான் என்றழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் தான். 1986 ஆம் ஆண்டில் சாதாரண போராளியாக புலிகள் இயக்கத்தில் இணைந்து, தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவரின் மெய்க்காப்பாளர் எனும் தகுதியினை அடைந்து, ஈற்றில் தலைவருக்கு அடுத்த நிலையினையும், கிழக்கு மாகாண புலிகளின் பெரும் தளபதி எனும் நிலையினையும் அடைந்தவன். புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கெடுத்து, தலைவரினதும் போராளிகளினது நம்பிக்கைக்குப் பாத்திரமாக வலம் வந்த கருணா ஒரு கட்டத்தில் புலிகளின் மிகப்பெரும் தளபதி எனும் போதை தலைக்கேற, நிதிமுறைகேடு, தலைமைக்குத் தெரியாமல் தனக்கென்று தனியான நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டது, அதிகார துஸ்பிரயோகம், பெண்போராளிகளை தனது இச்சைக்குப் பயன்படுத்துவது, சிறுவர்களை கட்டாயமாக இயக்கத்தில் இணைத்தது, சிங்கள ராணுவத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தியது என்று இயக்க விதிகளுக்கு முரணான வகையில் நடக்கத் தொடங்கினான்.

    இந்த முறைகேடுகள் பற்றி அவனுடன் இருந்தவர்கள் தலைமைக்குத் தெரிவிக்கவே சுதாரித்துக்கொண்ட கருணா, இயக்கத்திற்கெதிராகச் செயற்படத் தொடங்கினான். முதலில் தன்னுடன் 5000 போராளிகளை இயக்கத்திலிருந்து பிரித்தெடுத்த கருணா, அவர்களை இயக்கத்தின் தலைமைக்கு எதிராக இயங்குமாறு வற்புறுத்தினான். அவனது கட்டளைக்குப் பணிந்து சேர்ந்தவர்கள் போக, அவனது கட்டளையினை ஏற்கமறுத்தவர்கள் அவனாலும், அவனது தோழர்களாலும் கொல்லப்பட்டனர். கெளசல்யன் எனும் அரசியல்துறைப் போராளி, பல உளவுத்துறைப் போராளிகள் உட்பட பலர் இதனுள் அடக்கம்.

    கிழக்கில் தனக்கான அதிகார மைய்யத்தினை இலங்கை ராணுவத்தின் உதவியுடன் நிறுவிய கருணா, புலிகளியக்கம் தனக்கெதிரான தாக்குதல்களை ஆரம்பித்தவுடன், தன்னுடன் பல தோழர்களை அழைத்துக்கொண்டு இலங்கை அரச அமைச்சர் ஒருவரின் உதவியுடன் ராணுவ கவச வாகனங்களில் கொழும்பிற்குத் தப்பிவந்து சிங்கள அரசிடம் தஞ்சமானான்.

    கருணாவின் பிளவு வரைக்கும் புலிகளை கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றமுடியாது தவித்த ராணுவம், கருணாவின் வெளியேற்றத்தினையடுத்து கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான குடும்பிமலை ( தொப்பிகலை என்று சிங்களத்தில் பெயர்மாற்றப்பட்ட தமிழர்களின் வனப்பகுதி) மற்றும் வாகனேரி ஆகிய பகுதிகளில் கருணா குழு உறுப்பினர்களின் துணையோடு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு மிக இலகுவாக முழுக் கிழக்கு மகாணத்தையும் கைப்பற்றிக்கொண்டது. மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்லாமல், கிழக்கின் திருகோணமலை மாவட்டத்திலும் தனக்கு ஆதரவானவர்களை ஒன்றுதிரட்டிய கருணா ராணுவத்திற்கெதிராகச் செயற்படவேண்டாம் என்றும், புலிகளுக்கெதிராக இயங்குமாறும் கேட்டுக்கொண்டான். இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விடயம், யாழ்க்குடா நாட்டின் நுழைவாயிலிலான முகமாலைப் பகுதியில் களமிட்டிருந்த கிழக்கு மாகாணப் போராளிகளினால் அமைக்கப்பட்டிருந்த ஜெயந்தன் படையணித் தளபதிகளுக்கு கருணா அனுப்பிய தகவல்களில், “நீங்கள் உங்கள் காவலரண்களை விட்டு வெளியேறி, ஆயுதங்களுடன் ராணுவத்திடம் சரணடையுங்கள். நான் அவர்களிடம் பேசிவிட்டேன், உங்களைப் பாதுகப்பாக மட்டக்களப்பிற்கோ அல்லது கொழும்பிற்கோ அவர்கள் கூட்டிவருவார்கள். முகமாலை ராணுவத்தின் வசமாகிவிடும்” என்று கேடுக்கொண்டது புலிகளியக்கத்திற்கு அப்போராளிகளலாலேயே அறிவிக்கப்பட்டதுடன், தமது நிலகளிலிருந்து பின்வாங்கி ராணுவத்திடம் சரணடைவதை அன்று ஜெயந்தன் படையணி செய்யவில்லை.

    அத்துடன், கொழும்பில் தங்கியிருந்த கருணா குழு, அங்கிருந்து பல தமிழர்களைக் கொல்வதற்கும், புலிகளியக்க உறுப்பினர்களைக் காட்டிக் கொடுப்பதற்கும் ராணுவத்துடன் சேர்ந்துகொண்டது. மேலும், 2004 முதல் 2006 வரையான காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போராளிகள், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதல்கள், விமானத்தாக்குதல்களுக்கான அடையாலப்படுத்தல்களை ராணுவத்தின் ஆள ஊடுருவும் படையணியென்று அழைக்கப்பட்ட கருணா குழு உறுப்பினர்கள் உட்பட்ட தமிழ்பேசும் புலியெதிர்ப்புப் போராளிகளைக்கொண்ட கொமாண்டோ அணியினாலேயே செய்யப்பட்டது.

    இறுதியாக, 2006 இல் மகிந்த ராஜபக்ஷ புலிகளுக்கெதிரான போரினை தொடங்கியபோது, வன்னியில் புலிகளின் முகாம் அமைவிடங்கள், வழங்கற்பாதைகள், புலிகளின் போரிடும் நுட்பங்கள், புலிகளின் புலநாய்வுத்துறையினரின் கொழும்பு மறைவிடங்கள், தளபதிகளினதும், முக்கியஸ்த்தர்களினதும் அன்றாட நகர்வுகள் முதல் அனைத்து ரகசியங்களையும் ராணுவத்திற்கு வழங்கியமை , இறுதியில் இனக்கொலை முடிவுற்றபோது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைக்கு அழுத்தம் கொடுத்ததுவரை கருணாவின் துரோகம் மிகப்பெரிய தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது.

    இவன்போல் ஒரு மாபெரும் துரோகியை தமிழினம் இதுவரை கண்டதில்லை.

    2. செல்வராசா பத்மநாதன்

    நடுவே ராணுவச் சீருடையில் அமர்ந்திருப்பவர் – துரோகி கே பீ

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிக நெருங்கிய தோழனும் புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவு, புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்படும் பணத்தின் மீதான அதிகாரம், புலிகளின் சர்வதேச கப்பற்போக்குவரத்திற்கான முழுக் கட்டுப்பாடு ஆகிய அனைத்தையுமே தன்னிடத்தில் கொண்டிருந்த கே பீ எனப்படும் செல்வராசா பத்மநாதன் என்பவர் தமிழர்களின் மிகப்பெரும் துரோகிகளில் இன்னொரு முக்கியமானவர்.

    2003 ஆம் ஆண்டு, இவரது நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானித்த தலைவர், இவரிடமிருந்து பொறுப்புக்களைக் களைந்து தாயகத்திலிருந்து சென்ற இரு போராளிகளிடம் ஒப்படைத்திருந்தார். இதனால் கடுப்படைந்த கே பீ தலைவரைப் பழைவாங்க சிங்கள ராணுவ புலநாய்வுத்துறியுடன் சேர்ந்து இயங்கத் தொடங்கினார். 2008 இல் இவர்க்கு மீண்டும் அதிகாரங்கள் வழங்கப்பட்டதையடுத்து, புலிகளின்ச் அர்வதேச ஆயுதக் கொள்வனவு சிங்கள ராணுவத்தின் எண்ணப்படியே நடந்ததுடன், இறுதி மாதங்களில் புலிகளுக்கென்று இவர் அனுப்பிய கப்பல்களில் ஆயுதங்கள் இல்லாமல் வெற்றுக் கப்பல்களாகவே அனுப்பப்பட்டதாகவும், தானே வெற்றுக்கப்பல்களையும் அனுப்பி, தானே சிங்கள – இந்திய உளவுத்துறைகளுக்குச் செய்தியனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இவரது தகவல்களின் அடிப்படையிலேயே புலிகளின் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்திய கடற்படையினரால் அழிக்கப்பட்டு வந்தன.

    இறுதியாக மலேசியாவில் வெளிப்படையாகவே தோன்றி இவர் ஆடிய நாடகத்தின் உச்ச கட்டம்தான் இவரை மலேசியப் பொலீஸ் கைதுசெய்து இலங்கைக்கு அனுப்பியது. புலிகளுக்கு அனுப்பவென்று புலம்பெயர் தமிழர்கள் பனியிலும், வெய்யிலிலும் தமது வியர்வையைச் சிந்தி உழைத்த பல மில்லையன் டாலர்களும், புலிகளின் கப்பல்களும் இவரால் மகிந்த ராஜபக்ஷவுக்கும், கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அதுமட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளில் புலிகளின் முகவர்களாகச் செயற்பட்டவர்களின் விபரங்களையும் இவர் ராணுவத்தின் உளவுத்துறைக்கு வழங்கினார்.

    புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சிதத்தது, இறுதிப் போரில் புலிகளுக்கான ஆயுத வளங்கலை வேணுமென்றே இல்லாதொழித்து, புலிகளின் கப்பல்களை அழிக்க சிங்களவர்களுக்கும் – காங்கிரஸுக்கும் உதவிய இவரது துரோகம் கருணாவின் துரோகத்திற்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல.

    3. மாத்தையா எனப்படும் கோபாலசாமி மஹேந்திரராஜா

    இந்திய உளவாளி மாத்தையா – தலைவருடன்

    இந்திய ராணுவத்துடனான கைதிகள் பரிமாற்றத்தின்போது மாத்தையா

    கருணாவுக்கு முதல், புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவராகவிருந்தவர். பிரபாகரனுக்கு மிகவும் நெருங்கியவராகவும், பிரபாகரன் சார்பாக இயக்கத்தில் முடிவுகளை எடுக்கக் கூடியவராகவும் இருந்தவர். இந்திய ராணுவம் ஈழத்தில் தமிழர்மீதான யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தவேளையில், புலிகளுக்குப் பொறுப்பாகவிருந்தவர். பலமுறை இவர் தலைமையிலேயே கைதிகள் பரிமாற்றம் நடந்திருக்கிறது.

    ஆனால், ஒருபுறம் புலிகளுடன் மோதிக்கொண்டே, இந்திய உளவுத்துறை புலிகளுக்குள் ஊடுருவி, உள்ளிருந்தே அவர்களை அழிக்கும் வழிவகைகளை ஆரய்ந்தபோது, மாத்தையாவே அதற்குச் சரியான ஆள் என்று திட்டமிட்டிருந்தது.

    புலிகளுடனான யுத்தமும், அதன்பின்னரான கட்டாய வெளியேற்றமும் பிராந்திய வல்லரசான தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாகக் கருதிய இந்திய உளவுத்துறை, 1991 இல் மாத்தையாவை அணுகி, பிரபாகரனைக் கொல்வதன் மூலம் முழு இயக்கத்தினையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் மாத்தையா கொண்டுவர முடியுமென்றும், மாத்தையா தலைமையிலான புலிகளியக்கத்திற்கு முன்னரைப் போலவே இந்தியா உதவும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மாத்தையாவுக்கும், இந்திய உளவுத்துறைக்குமான ரகசியப் பரிமாற்றங்களுக்குத் துணைபோன பொறியியலாளர் ஒருவர் மூலம் இத்தகவல்களை புலிகள் அறிந்துகொண்டார்கள்.

    இதேவேளை, இந்திய உளவுத்துறையின் சொற்படி செயற்படத்தொடங்கியிருந்த மாத்தையாவும், அவரது குழுவினரும் இந்திய உளவுத்துறைக்கு பல தகவல்களை வழங்கத் தொடங்கியிருந்தார்கள். அதில் முக்கியமானது 1993 ஜனவரி மாதம் 16 ஆம் திகதி எம் வி அகத் எனப்படும் புலிகளின் கப்பலில் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து புலிகளின் முன்னாள் யாழ்ப்பாணத் தளபதியான கிட்டு என்றழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமார் இன்னும் சில போராளிகளுடன் இலங்கை நோக்கி வந்துகொண்டிருக்கிறார் எனும் தகவல். வருவது கிட்டுதான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட இந்திய கடற்படை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து அவரையும் அவரது தோழர்களையும் சுற்றிவளைத்துச் சரணடையுமாறு வலியுறுத்தியது. அவர்கள் மறுக்கவே, அக்கப்பல்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. உயிருடன் பிடிபடுவதைத் தடுப்பதற்காக கிட்டுவும், ஏனைய போராளிகளும் கப்பலுக்குத் தீவைத்து அதில் தாமும் மரணத்தைத் தழுவினர். கப்பலில் புலிகளுக்கு அப்போது அவசியமாகத் தேவைப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கிட்டு கொண்டுவந்திருந்ததாகவும், இவை இந்திய கடற்படையின் கைகளுக்குள் செல்வதைத் தடுப்பதும் கிட்டுவினதும், அவருடைய தோழர்களினதும் நோக்கங்களில் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது.

    திராவிடர் கழகத்தின் வீரமணி, கிட்டு, பழ நெடுமாறன் ஐயா

    கிட்டுவின் மரணம் பிரபாகரனையும், புலிகளியக்கத்தையும், மக்களையும் வெகுவாகப் பாதித்திருந்தது. பிரபாகரனின் சிறு வயதுத் தோழனான கிட்டுவின் மரணத்தின் பின்னால் மாத்தையா இருந்ததை அறிந்துகொண்டபோது கடும்சினம் கொண்ட தலைவர், மாத்தையாவையும், அவருக்கு உதவியாகவிருந்த போராளிகளையும் கைதுசெய்து விசாரிக்கத் தொடங்கினார்.

    இந்த விசாரணைகளின்பொழுது, மாத்தையாவினாலும், இந்திய உளவுத்துறையினாலும் கட்டாயப்படுத்தப்பட்டு செயல்ப்பட்டு வந்த ஒரு போராளி உண்மையை ஒத்துக்கொண்டதுடன், பல தகவல்களையும் வழங்கினார்.

    இதனடிப்படையில், மாத்தையாவுக்கும், அவருடன் கூடச் செயலாற்றிய போராளிகளுக்கும் புலிகளியக்கத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    புலிகளியக்கத்திடம் உண்மைகளைக் கூறி ஒத்துக்கொண்ட போராளியும் இன்னும் பல மாத்தையா ஆதரவுப் போராளிகளும் இலங்கை ராணுவத்துடன் இணைந்துகொண்டார்கள். இவர்களுக்கான தனியான தளத்தினை பலாலி விமானப்படைத்தளத்தில் அமைத்துக்கொடுத்த இலங்கை ராணுவம், யாழ்க் கூடா நாட்டைக் கைப்பற்றும் சூரியக்கதிர் நடவடிக்கையின்பொழுது மாத்தையா அணியின் போராளிகளை முன்னேறிவந்த சிங்கள ராணுவ அணிக்கு பக்கவாட்டில் முன்னேறும் அணியாக அனுப்பினார்கள். இந்த ராணுவ நடவடிக்கையின் முடிவில் சிங்கள ராணுவம் , புலிகளை யாப்பாணத்திலிருந்து வெளியேற்றி முழுக் குடா நாட்டைனையும் ஆக்கிரமித்துக்கொண்டது.

    இதில் வேதனை என்னவென்றால், இது நடந்து 3 வருடத்திற்கு முன்னர் இதே மாத்தையா குழு கட்டைக்காடு – இடைக்காடு எனும் பகுதியிலிருந்த ராணுவ முகாம்களை அழித்து துவசம் செய்ததென்பதும், பின்னர் அப்பகுதியூடாகவே இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து மாத்தையா அணி சூரியக்கதிர் நடவடிக்கையினை புலிகளுக்கெதிராக தொடங்கியதும் ஆகும்.

    புலிகளியக்கத்தினுள் இந்திய உளவுத்துறைக்கு ஸ்லீப்பர் செல் எனப்படும் உறங்கு நிலை உளவாளிகளை உருவாக்கி, தலைமையினை முற்றாக அழித்து, இயக்கத்தை தனது கைகளுக்குள் கொண்டுவந்து , இந்தியாவின் ஐந்தாம்படையாக இயக்குவதற்கு ஆசைப்பட்ட மாத்தையாவும், யாழ்க்குடாநாட்டினைக் கைப்பற்ற இந்திய – சிங்கள அரசுகளுக்கு உளவுத்தகவல்களை வழங்கிய அவரது தோழர்களும் செய்த துரோகம் குறிப்பிடத்தக்களவு பாதிப்பினை புலிகளுக்கும் மக்களுக்கும் ஏற்படுத்தியது.

    4. இந்திய , இலங்கை இராணுவங்களோடு சேர்ந்தியங்கிய மாற்றியக்க உறுப்பினர்கள்

    புலிகள் தங்களை இயங்கவிடவில்லை என்று இவர்கள் தமது துரோகத்திற்கு நியாயம் கற்பித்தாலும்கூட, இவர்கள் செய்வது பணத்திற்கான அப்பட்டமான துரோகம். இவர்களின் துரோகத்தனங்களால் நாம் ஆயிரக்கணக்கான போராளிகளை, பல தளபதிகளை, ஆயிரக்கணக்கான மக்களை, எமது நிலத்தை இன்று இழந்து நிற்கிறோம்.

    முக்கியமாக புளொட் அணி, வரதர் அணி, பரந்தன் ராஜன் அணி, டக்கிளஸ் தேவானந்தா அணி ஆகியவை குழுக்களாகவும், புளொட் மோஹன், ராசீக் ஆகியோர் தனி நபர்களாகவும் இலங்கை ராணுவத்துடனும் இந்திய ராணுவத்துடனும் இணைந்து பல கொலைகளைப்,புரிந்தனர்.

    கப்டன் ராசீக் – மனித உருவில் உலவிய மிருகம்

    இதில் ராசீக் என்பவன் முன்னர் இ பி ஆர் எல் எப் அமைப்பின் கிழக்குமாகாண ராணுவத் தளபதியாகவிருந்து, புலிகளால் அவ்வியக்கம் தடைசெய்யப்பட்டபொழுது, நேரடியாக இலங்கை ராணுவத்துடன் இணைந்து தமிழர்களைக் கொல்வதை தொழிலாகச் செய்துவந்தவன். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகளின் போராளிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்பு கொல்வது, மக்களை புலிகளின் அனுதாபிகள் என்று இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுப்பது, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் ஆழ ஊடுருவி புலிகளின் பிரமுகர்களையும், பொதுமக்களையும் கொல்வது என்பதே இவனது தொழிலாக இருந்துவந்தது. இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் செல்லப்பிள்ளையாக வலம்வந்த இவன் ராணுவ அதிகாரிக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்டிருந்ததோடு, 1999 இல் புலிகள் தற்கொலைத் தாக்குதல் ஒன்றின்மூலம் இவனைக் கொல்லுமளவிற்கு மிகப்பெரிய தலையிடியாக மாறியிருந்தான். ப. கணேஷமூர்த்தி எனும் இயற்பெயரைக் கொண்ட ராசீக், இலங்கை ராணுவத்தின் காலாட்படையின் அதிகாரியாகவும், அவனுக்குக் கீழ் குறைந்தது 250 தமிழர்கள் துணை ராணுவமாக இலங்கை அரசபடைகளின் மின்னேறியா மற்றும் பொலொன்னறுவை ஆகிய ராணுவ முகாம்களில் முழுமையான பயிற்சிகளை மேற்கொண்டு புலிகளையும், மக்களையும் தேடியழிக்கும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

    இந்திய ராணுவம் ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் இவனது அட்டகாசங்கள் உச்ச நிலையினை அடைந்திருந்தது என்பதும், இந்திய ராணுவம் தான் வெளியேறும் தறுவாயில் கட்டாயப் பயிற்சிமூலம் சேர்த்த தமிழ் தேசிய ராணுவத்திற்கு ராசீக்கே பொறுப்பாக இருந்தான் என்பதும், இந்திய அரசின் பொம்மை முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் 1999 இல் இலங்கைக்கு மீண்டும் வந்து, தமிழ்த்தேசியத்திற்கெதிரான அரசியலை முன்னெடுக்க முயற்சித்தபொழுது , ராசீக்கே வரதரின் வலதுகரமாகச் செயற்படத் தொடங்கினான் என்பதும் குறிப்பிடத் தக்கது.

    அடுத்ததாக, புளொட் மோஹன் எனப்படும் இலங்கை ராணுவத்தின் ராணுவப் புலநாய்வுப்பிரிவின் தமிழ் துரோகியைப் பற்றிப் பார்க்கலாம்.

    புளொட் மோஹன் இரத்த வெள்ளத்தில் – சாகும்வரை தமிழர்களை நரவேட்டையாடிய தமிழ்த் துரோகி

    இலங்கை ராணுவத்துடன் சேர்ந்தியங்கிய தமிழ்த் துரோகிகளில் இவன்போன்றதொருவன் கருணா துரோகியாக மாறும்வரை இருந்ததில்லை. இவனது செயற்பாடுகளால் கொல்லப்பட்ட புலிகளும், பொதுமக்களும் ஏராளம். 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி கொழும்பு நகர்ப்பகுதியில் புலிகளால் இவன் சுட்டுக் கொல்லப்படும்வரைக்கும் இவனது கொலைக் களம் திவிரமாக இயங்கிக்கொண்டிருந்தது.

    கந்தையா யோகராஜா எனும் இயற்பெயரைக் கொண்ட இவன் கிழக்கு மாகாணத்திலிருந்து புளொட் எனும் தமிழ்ப் போராளி அமைப்பில் ஆரம்பகாலத்தில் சேர்ந்தவன். இயக்கத்தினுள் இவனது உட்கொலைகளால், அவ்வியக்கமே அவனை அகற்றிவிட்டிருந்தது.

    இந்திய ராணுவம் ஈழத்தில் நிலைகொண்டிருந்த நாட்களில், புலிகளையும், ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுப்பதற்கான இவனை தமது அணியில் சேர்த்திருந்தனர். இந்திய ராணுவத்துடனான ஸ்நேகமும், இவனால் கொல்லப்பட்ட புலிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையும், சிங்கள ராணுவத்திற்கு சாதகமாக அமையவே, இவனைத் தமது ராணுவ புலநாய்வுத்துறையில் நிரந்த அதிகாரியாகச் சேர்த்தனர்.

    1993 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற சுமார் 350 அப்பாவிகளின் படுகொலைகளை விசாரித்த நீதிபதிகள் குழு, இலங்கை ராணுவமே இவற்றில் ஈடுபட்டதென்பதை உறுதிப்படுத்திஒயதோடு , முக்கியமாக ராணுவ புல்நாய்வுத்துறையின் அதிகாரிகளான புளொட் மோஹன் மற்றும் கப்டன் முனாஸ் ஆகியோர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயோதிபர்கள் அடங்கலாக 350 பொதுமக்களை வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான் ஆகிய கிராமங்களிலிருந்து இழுத்துச் சென்று சுட்டும் வெட்டியும் கொன்றதாக சாட்சிகளுடன் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றுள் பல பெண்களை புளொட் மோஹனும் அவனது நண்பனான கப்டன் முனாஸும் பாலியல் வன்புணர்வின் பின் கொன்றுபுதைத்ததும் வெளிவந்திருந்தது.

    நீதிபதிகளின் தீர்ப்பினை ஏற்கமறுத்த சிங்கள ராணுவம், புலிகளை அழிக்கும் தமது யுத்தத்தில், புளொட் மோஹன் தவிர்க்கப்பட முடியாத சக்தியென்று கூறியிருந்தார்கள்.

    கிழக்கு மாகாணத்திலும், கொழும்பிலும் புளொட் மோஹன் குறைந்தது 600 தமிழர்களைக் கொன்றது நிரூபிக்கப்பட்டிருந்ததோடு, இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணாமல்ப் போனதற்கும் அவனே காரணமாக இருந்திருக்கிறான்.

    கருணா, புலிகளுடன் இருந்த காலத்தில், தந்திரமாக அவனிடமிருந்து தப்பியிருந்த புளொட் மோஹன், புலிகள் தன்னை இலக்குவைக்கிறார்கள் என்று தெரிந்ததும், பல மில்லியன் ரூபாய்களுடன் கொழும்பிற்கு தனது அமைவிடத்தை மாற்றிக்கொண்டான். இலங்கை அரசு அவனுக்கு உயர் ராணுவ அதிகாரியொருவருக்கு நிகரான பாதுகாப்பினை அளித்திருந்தது.

    கொழும்பில் இருந்துகொண்டு ராணுவத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின், ஆழ ஊடுருவும் அணி எனப்படும் புலிகளின் பகுதிகளில் போராளிகளையும், பொதுமக்களையும் இலக்கு வைத்துக் கொன்றுவந்த அணியின் பொறுப்பினை இவன் ஏற்றுக்கொண்டதுடன், பல முன்னாள் தமிழ்ப் போராளிகளையும் தன் அணியில் சேர்த்துக்கொண்டான்.

    புலிகளின் மூத்த தளபதிகளான கேணல் ஷங்கர் மற்றும் கடற்புலிகளின் தளபதிகள் பலரை பதுங்கியிருந்து கொன்றது இவனது அணியென்பது குறிப்பிடத்தக்கது.

    சிங்களவர்களின் சொக்கத் தங்கமாக விளங்கிய தமிழ்த்துரோகி புளொட் மோஹன், இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத்துறையின் முக்கிய அதிகாரி மேஜர் கருனாரத்னே பதவி விலகியபொழுது, அப்பதவிக்கு அவன் நியமிக்கப்பட்டான்.

    சிங்கள ராணுவ அதிகாரிகளைக் காட்டிலும் உயர் அந்தஸ்த்து வழங்கப்பட்டிருந்த புளொட் மோஹன் எனும் கொலையாளி, மேஜர் முத்தலிப் எனும் பெயர்பெற்ற ராணுவ புலநாய்வு அதிகாரியுடன் சேர்ந்து பல கொலைகளை அரங்கேற்றியிருந்தான் என்று சிங்கள ஊடகங்களே அவனுக்கு நற்சான்றிதழ்களை வழங்கியிருந்தன.

    புலிகளுக்கு பெரும் தலையிடியாக மாறியிருந்த இரத்தவெறிபிடித்த இந்த இனத்துரோகி, புலிகளின் பிஸ்ட்டல் குழுவினால், கொழும்பின் பிரபல அங்காடித் தெருவொன்றில், நூற்றுக்கணக்கானவர்கள் பார்த்திருக்க, உடல் சல்லடை போடப்பட்டு அந்த இடத்திலேயே தெருநாயைப் போல இறந்து வீழ்ந்தான்.

    தமிழரை அழிக்க சிங்களவனுக்கு சேவகம் செய்த இந்த துரோகி இறந்தபொழுது, சிங்கள அரசோ, ராணுவமோ இவனைத் தமது அதிகாரியாக உரிமை கோரவில்லை.

    6. கருனாநிதி

    நாம் நம்பியிருந்த அந்த முகம் !

    மிக அண்மைக்காலம்வரைக்கும், அமரர் எம் ஜி ராமச்சந்திரனுக்குப் பிறகு ஈழத்தமிழர்களால் பெரிதும் விரும்பப்பட்ட மனிதர். கருனாநிதி எனும் பெயரே ஈழத்தில் பலருக்கு நம்பிக்கையினைக் கொடுக்கும் காலம் ஒன்றும் இருந்தது. அவரது தமிழ் மொழிமீதான ஆளுமையும், சாதிய எதிர்ப்பும் எமைக் கவர்ந்திருந்தன. 1990 ஆம் ஆண்டில், ஈழத்தில் தமிழர்கள் குருதியாற்றில் குளித்து கரையேறிய இந்திய அமைதிப்படை வீரர்களைச் சென்று வவேற்கமாட்டேன் என்கிற அவரது தைரியம் எம்மை மெய்சிலிர்க்க வைத்தது. 1991 இல் சிறிபெரும்புதூரில் கொல்லப்பட ராஜிவுக்காக அநியாயமாகக் கலைக்கப்பட்ட கலைஞரின் ஆட்சிக்காகக் கண்ணீர் சிந்தியோரும் இருக்கிறோம். தொடர்ந்து ஜெயலலித – காங்கிரஸ் கூட்டின் மிகப்பெரிய வெற்றியும், கலைஞரின் தோல்வியும் எம்மை வருத்தின. ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் மீதான தொடர்ச்சியான காழ்ப்புணர்வுடன் கூடிய ஆணவப் பேச்சுக்களும், நடவடிக்கைகளும், அரச அடக்குமுறைகளும் 2009 வரைக்கும் நாம் அவரை எமது எதிரியாகவே பார்க்கும்படி வைத்திருந்தது. இறுதிவரை கலைஞர் எங்கள் ஒரே நம்பிக்கையாக இருந்தார். ஈழத்தமிழருக்காக ஆட்சிசெய்தும், அவர்களுக்காகவே ஆட்சியையும் இழந்த அவர்மீது அளப்பரிய மரியாதையும் நன்றியும் எமக்கிருந்தது.

    ஆனால், எங்களின் நம்பிக்கைகள் , ஆசைகள், வர்மீது எமக்கிருந்த நெருங்கிய பாச உணர்வையும் தூக்கியெறிந்துவிட்டு அவர் போனார். ஈழத்தமிழர் தொடர்பாக தொடர்ச்சியான கடும்போக்கினைக் கொண்டியங்கிவந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தார். 2006 தமிழகத் தேர்தல்களில் தமிழ்த் தேசிய சக்திகளின் கோரிக்கையினையும் மீறி, ஈழத்தமிழர்களுக்கெதிராகவும், தமிழ்த்தேசியத்திற்கெதிராகவும் வக்கிரமான காழ்ப்புணர்வைக் கொட்ட காங்கிரஸிற்கு தமிழகத்தில் களம் அமைத்துக் கொடுத்தார் கருனாநிதி. தேர்தல்களின் முடிவில் அவரது காங்கிரஸுடனான கூட்டணி 234 தொகுதிகளில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியது.

    அதன்பின்னர் நடந்தவை சரித்திரம்.

    தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் தி மு க வுடன் பங்காளிகளாக இருப்பது தனது ஈழத்தமிழர்மீதான இனக்கொலைக்கும் சாதகமானதென்பதை தேர்தலுக்கு முன்னமே கணிப்பிட்டிருந்த சோனியா, வெற்றியின் பின்னர் மிகத் தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.

    காங்கிரஸ் கட்சியின் ஈழத்தமிழர் விரோதப் போக்கு கலைஞர் அறியாததல்ல. ஆனாலும், இலங்கையில் பெளத்த இனவாதிகளும், சோனியாவும் தமிழர்மேல் கொடூரமான யுத்தம் ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் என்று 2006 இல் கலைஞர் நிச்சயமாக அறிந்துதான் வைத்திருந்தார். காங்கிரஸுடனான கூட்டணிக்கு தமிழகத்தில் தமிழ்த்தேசிய உறவுகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும்கூட, காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து வெற்றியும் பெற்றார்.

    2009 இல் இனவழிப்புப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்தபொழுது, சோனியாவுக்குக் கடிதம், தந்தி என்று ஆரம்பத்திலும், பின்னர் மனிதச்சங்கிலிப் போராட்டம் என்று தனது தொண்டர்களைக்கொண்டு தனது தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்தும், உண்ணாவிரதப் போரட்டம் என்று மரினா சாலையில் சில மணிகளே படுத்திருந்தும் எழுந்து வந்துவிட்டார். போர் முடிந்துவிட்டது, இலங்கையரசை அடிபணிய வைத்துவிட்டோம் என்று கருனாநிதி பேசியது முழுப்பொய்யென்பது அவரது கட்சிக்கும் அவருக்கும் நன்கு தெரியும், ஆனாலும் அதைத் தெரிந்தே செய்தார். போர் முடியாதென்பதும், புலிகள் அனைவரும் கொல்லப்பட்டு, தமிழர் தாயகம் முற்றாக சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்படும்வரை தொடர்ந்து நடக்கும் என்பதும் காங்கிரஸினால் அவருக்கு ஏற்கனவே சொல்லப்பட்டு, அவரின் சம்மதமும் பெற்றபின்புதானே ஆரம்பிக்கப்பட்டது? அப்படியிருக்க, போர் முடிந்தது என்று அவர் கூறியது மக்களை ஏமாற்றி, உணர்வுகளுக்கு மூடி போட்டு மூடத்தானே? அப்படியிருந்தும் யாரோ ஒருவர், “நீங்கள் கூறுவதுபோல் யுத்தம் நிற்கவில்லையே, யுத்தத்தினை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்போவதில்லையென்று இலங்கையரசு சொல்கிறதே?” என்று கேட்டதற்கு, அவரது தமிழ்த் திறமையினைக் காட்டி “மழைவிட்டாலும், தூறல் விடாமல்ப் பெய்வதில்லையா, அதுபோலத்தான் இதுவும்” என்று கூறிச் சிரித்தார்.

    ஆனால், தமிழருக்கு கலைஞர் மறைத்த விடயங்களின் பட்டியல் இருக்கிறது. அப்பட்டியலில் இருப்பவை கலைஞர் எனும் கருனாநிதியின் உண்மை முகத்தினைக் காட்டும் வக்கிரங்கள். ஈழத்தமிழினம் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டுக்கொண்டிருக்க, அவரது தொலைக்காட்சியோ அதுபற்றி எதுவுமே பேசாமல், நடிகைகளின் அழகினை மானுக்கும் மயிலுக்கும் ஒப்பிட்டுக்கொண்டிருந்தது. தமது கொலைகளை வெளிப்படையாகச் செய்வதற்கு தமிழகத்து தமிழனின் உணர்வுகளை அடக்குவதற்கு சோனியாவும் அவரது கோடரிக்

    காம்புகளும் முயற்சித்தபோது, அவர்களுக்குக் கலைஞர் கைகொடுத்தார்.

    கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் மூடியதன் மூலம், மாபெரும் மாணவர் எழுச்சியை முளையிலேயே கிள்ளிப்போட்ட கலைஞர், அதையும் மீறி வீதிகளில் இறங்கியவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலம் கைதுசெய்து சிறையிலடைத்தார். இதற்குக் கூலியாக கலைஞர் சோனியாவிடமும், சிவ்ஷங்கர் மேனனிடமும் கேட்டுக்கொண்ட ஒரு விடயம் இருக்கிறது, அதுதான் எப்படியாவது பிரபாகரனும், புலிகளும் அழிக்கப்படவேண்டும் என்பது. புலிகளின் தலைவரும், பிரதான தளபதிகளும் கொல்லப்பட்டார்கள் என்று சிங்கள அரசு கொக்கரித்துக்கொண்டிருக்க கலைஞர் மனதிற்குள் சிரித்துக்கொண்டே தில்லியில் முகாமிட்டு தனது சாணக்கியத்தையெல்லாம் திரட்டி தனது மகளுக்கும், மகனுக்கும் பேரனுக்கும் ஆசன பங்கீடு குறித்துப் பேரம் பேசிக்கொண்டிருந்தார் .

    யுத்தம் முடிந்த பின்னர் அவர் இலங்கைக்கு அனுப்பிய தமிழக சட்டசபைக் குழுவில் தி மு க வினர் சிங்கள போர்க்குற்றவாளிகளுக்குப் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்ததைத்தான் நாம் பார்த்தோமே? பிரபாகரனையும், புலிகளையும் (கூடவே ஒன்றரை லட்சம் அப்பாவிகளையும்) கொன்றதற்குத்தான் அந்தப் பொன்னாடை என்பது கனிமொழியின் முகத்திலிருந்த புன்னகையே சொல்லியது.

    தமிழ்நாட்டில் கண்டனக் கூட்டம் – கொழும்பிலோ பொன்னாடை போர்த்தல் – தி மு க வின் இரட்டை வேடம்

    எதிரியென்றாகியதன் பிறகு, இனிமேல் மறைக்க என்னவிருக்கிறது என்று எண்ணித்தான் பிரபாகரனின் வயோதிப அன்னையை சிகிச்சைக்குக் கூட தமிழகத்தில் தரையிறங்கவிடமாட்டேன் என்று திருப்பியனுப்பினாரோ என்னவோ? ஆனால் என்ன, பாவம், திருமதி பார்வதியம்மாள் தமிழகம் வருவது அவருக்குத் தெரிந்திருக்கவில்லையாம், தெரிந்திருந்தால் சிவப்பு (ஈழத்தமிழன் ரத்தத்தில்) கம்பளம் விரித்து வரவேற்றிருப்பாரோ என்னவோ?

    கருனாநிதியும் ஈழத்தமிழனைப் பொறுத்தவரை துரோகிதான், இதில் மாற்றுக்கருத்தில்லை.

    7. டக்கிளஸ் தேவானந்தா

    டக்கிளஸ் – பத்மநாபாவுக்கருகில் அமர்ந்திருப்பவன்

    ஈரோஸ் மாணவர் அமைப்பில் ஆரம்பித்து, பின்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து, பாலஸ்த்தினத்திற்கு இந்திய உளவுத்துறையினரால் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட முன்னாள் தமிழ்ப் போராளியான டக்கிளஸ் பாதைகள் மாறி, பயணங்கள் மாறி, தமிழகத்தில் கொலைகளைப்புரிந்து, பணத்திற்காக சிறுவர்களைக் கடத்தி இறுதியில் சிங்களவனிடம் அடைக்கலமாகி முற்றான துணை ராணுவக் குழுவாக இயங்கத் தொடங்கியதிலிருந்து இவனது துரோக வரலாறு ஆரம்பிக்கிறது.

    தமிழகத்தில் , இவனது அடாவடித்தனங்களுக்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, ஒரு வழக்கறிஞரைக் கொன்றும், இன்னும் நால்வரைக் காயப்படுத்தியதால் சிறைசென்று மீண்டு, பின்னர் இவனும், இவனது தோழர்களும் 10 வயதுச் சிறுவனைப் பணத்திற்காகக் கடத்தியதில் பொலீஸாரிடம் மாட்டுப்பட்டு, பல தில்லுமுல்லுகளுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டான். பிணையிலிருக்கும்போதே இலங்கைக்குத் தப்பிவந்த இவன் சிங்களப் பாதுகாப்பமைச்சரான ரஞ்சன் விஜேரத்தினாவோடு நேரடியாகப் பேரத்திலீடுபட்டு, “புலிகளை அழிக்க என்னாலான அனைத்து உதவிகளையும் வழங்குவேன், எனக்கு நீங்கள் பாதுகாப்புத் தரவேண்டும்” என்றதிலிருந்து இவன் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிரான தனது துரோக வாழ்க்கையை ஆரம்பித்தான்.

    இருதமிழ்த் துரோகிகளின் சங்கமம் – டக்கிளஸ் மற்றும் கருணா

    கொழும்பில் நாரஹேன்பிட பகுதியில் அமைந்திருந்த பாரிய அடுக்குமாடிக் கட்டடம் முதலில் இவனுக்கும் இவனது தோழர்களுக்கும் அரசால் வழங்கப்பட்டது. அங்கிருந்துகொண்டு, கொழும்பில் தமிழர்களைக் கடத்துவது, சித்திரவதை செய்வது, புலிகள் என்கிற பெயரில் தமிழர்களை ராணுவத்திற்குப் பிடித்துக் கொடுப்பது ஆகிய வேலைகளை இவனும் இவனது கும்பலும் செய்துவந்தது.

    1994 ஆம் ஆண்டுத் தேர்தலில் யாழ் தீபகற்பத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் எவையுமே போட்டியிடாத நிலையில் ராணுவமும், இவனது கும்பலும் மட்டுமே நடத்திய வாக்களிப்பில் வெறும் 9900 வாக்குகளைப்பெற்று 9 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொண்டான். ஒவ்வொரு சிங்கள அரசுடனும் தவறாமல் சமரசம் செய்து, ஒவ்வொரு அரசிலும் அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுவந்த இவன், தொடர்ச்சியாகத் தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கெதிராகவும், சிங்கள ஆக்கிரமிப்பிற்குச் சார்பாகவும் அரசியல் செய்துவருகிறான்.

    யாழ் தீபகற்பத்தில் இராணுவ ஆதரவுடன் பவணிவரும் கொலைகாரன் டக்கிளஸ்

    1990 ஆண்டு யாழ் தீபகற்பத்திலிருந்து புலிகள் முற்றாக வெளியேறதன் பின்னர், ராணுவம் மற்றும் கடற்படையுடன் இணைந்து தனது தர்பாரை நடத்திவரும் இவன் ஆட்களைக் கடத்துதல், காணாமற்போகச் செய்தல், கொலைகள் , பொருட்களை தமிழகத்திற்கும், இலங்கைக்குமிடையே கடத்திவருதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறான்.

    1995 ஆம் ஆண்டு புலிகள் யாழ்பாணத்திலிருந்து வெளியேறியதன்பின்னர், யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்கில் தனது பிரதான முகாமை அமைத்துக்கொண்ட இவன், அங்கும் கடத்தல்கள், சித்திரவதைகள் ஆகிய மனிதவுரிமை மீறல்களில் அரச ராணுவத்துடன் சேர்ந்து ஈடுபட்டு வருகிறான்.

    தமிழ்மக்கள் மீது அரச ராணுவத்திற்கு நிகராக கொலைகளை அரங்கேற்றிவரும் இவன், அல்லைப்பிட்டிப் படுகொலைகள், உதயன் பத்திரிக்கை நிலைய படுகொலைகள், பத்திரிக்கையாளர் நிமலராஜன் கொலை, முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொலை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் நிகழ்வுமீதான தாக்குதலும் கொலைகள் ஆகியன அடங்கலாக பலநூற்றுக்கணக்கான தமிழர்களின் படுகொலையுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறான்.

    டக்கிளஸினால் வழிபாடு செய்யும்போது சுட்டுக் கொல்லப்பட்ட அமைச்சர் டி மஹேஸ்வரனின் உடலும், அவரது குடும்பமும்.

    ஒரு இனக்கொலையாளியும் துரோகியும் : டக்கிளஸ் தனது எஜமானின் அருகே

    2006 ஆம் ஆண்டு, யாழ் தீபகற்பத்தில் அல்லைப்பிட்டிப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்த இவனது கும்பலும் இலங்கைக் கடற்படையும் இணைந்து நடத்திய வெறியாட்டத்தில் குறைந்தது 13 தமிழ் அப்பாவிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு பலர் படுகாயங்களுக்கும் உள்ளாகினர்.

    அல்லைப்பிட்டியில் டக்கிளஸினால் கொல்லப்பட்ட குடும்பம்

    அல்லைப்பிட்டியில் டக்கிளஸினால் கொல்லப்பட்ட அக்குடும்பத்தின் முதியவர் ஒருவர்

    அல்லைப்பிட்டியில் டக்கிளஸ் நரவேட்டையாடிய அப்பாவிகள் வாழ்ந்த வீடு

    இதேவருடம், தனது துரோகத்தனங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முயன்ற யாழ்ப்பாண நாளிதழான உதயன் பத்திரிக்கைக் காரியாலயத்தினுள் புகுந்து இவனும் இவனது கும்பலும் நடத்திய தாக்குதலில் இரு பத்திரிக்கையாளர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு, இன்னும் இருவர் படுகாயமடைந்தனர். இவ்வாறான இன்னும் ஒரு தாக்குதலில் இதே பத்திரிக்கையில் வேலைபுரியும் இளைஞர் ஒருவர் இவனால் வெட்டிக் கொல்லப்பட்டார்,

    உதயன் பத்திரிக்கை நிலையத்தில் டக்கிளஸினால் கொல்லப்பட்டவர்கள்

    யாழ்ப்பாணத்தில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் ராணுவத்துடன் இணைந்து இவனும் இவனது கும்பலும் செய்த தேர்தல் மோசடிகளை சர்வதேசச் செய்திச் சேவையான பி பி ஸி மற்றும் தமிழ் ஊடகங்களில் வெளிக்கொணர்ந்த பத்திரிக்கையாளர் மயில்வாகனம் நிமலராஜனை அரது வீட்டினுள் புகுந்து சுட்டும் வெட்டியும் கொன்ற டக்கிளஸ், அங்கே இருந்த அவரது தாயார், 11 வயது மருமகன், நிமலராஜனின் தந்தையார் மீதும் கைக்குண்டுத்தாக்குதல், வாள்வெட்டுத் தாக்குதலிலும் ஈடுபட்டதோடு, “எம்மைப்பற்றி எழுதினால், இதுதான் நடக்கும்” என்றும் எச்சரித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

    டக்கிளஸினால் சுட்டுக் கொல்லப்பட்ட பி பி ஸி பத்திரிக்கையாளர் நிமலராஜன்

    ஒரு கொலையாளி, தனது எஜமானர்களுடன்

    தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தினைத் தொடர்ச்சிட்யாகக் கொச்சைப்படுத்தியும், சிங்கள ஆக்கிரமிப்பினை ஆதரித்தும் வரும் டக்கிளஸின் கும்பலை சிங்களப் பேரினவாதம் தனக்குச் சார்பாகத் தொடர்ச்சியாகப் பாவித்துவருவதோடு, தமிழர்கள் அரசுடன் இணைந்து சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் இவனைப் பாவிக்கிறது. சர்வதேச நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் எந்த சிங்களப் பேரினவாத தலைவரும் டக்கிளஸை தம்முடன் அழைத்துச் செல்லத் தவறுவதில்லை.

    தமிழினத்தின் துரோகியை, சோனியாவின் பொம்மைக்கு அறிமுகப்படுத்தும் இனக்கொலையாளி : டக்கிளஸ், மகிந்த ராஜபக்ஷ மற்றும் மன்மோகன் சிங்

    ஒரு கொலையாளியை சோனியாவின் ஏவலாளிக்கு அறிமுகம் செய்துவைக்கும் இனக்கொலையாளி: டக்கிளஸ், மகிந்த மற்றும் இந்தியாவின் பிரணாப் முகர்ஜி

    சூளைமேட்டுக் கொலையில் நேரடியாகப் பங்குகொண்ட இவன்மீது வழக்கொன்று நிலுவையில் இருக்கின்றபோதும், இந்தியாவினால் இவனை இதுவரை எதுவுமே செய்ய முடியவில்லை.

    Tamil Mahan replied 1 year, 10 months ago 1 Member · 0 Replies
  • 0 Replies

Sorry, there were no replies found.

Log in to reply.