தியாகத்தின் உத்தமர்கள் எங்கள் மாவீரர்கள் –நிலவன்

 • தியாகத்தின் உத்தமர்கள் எங்கள் மாவீரர்கள் –நிலவன்

  Posted by Tamil Mahan on June 28, 2022 at 1:30 pm

  <b itemprop=”headline”>தியாகத்தின் உத்தமர்கள் எங்கள் மாவீரர்கள் –நிலவன்

  on: <time datetime=”2021-11-27T17:08:14+00:00″>November 27, 2021</time>

  இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

  எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.’

  – தேசியத் தலைவர்.

  உலகத் தமிழர் வரலாற்றில் தமிழர்களுக்கென விடுதலை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுவதற்காக தனித்தமிழர் மரபு வழி இராணுவத்தை தரை, கடல் என கடந்து வான் படையை நிறுவி பற்றுறுதியோடு தமிழர் நாமென்ற தலை நிமிர்வுடன் தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் கொண்ட கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டவர்களாய் தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் அதிகம் நேசித்தார்கள். தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயல் உருவம் கொடுத்தவர்கள், தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை பிரயோகிக்கவும் களமாடி, தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திர வேள்விக்கு தம் உயிர்களை வித்தாகி விருட்சமாய் மிளிர்பவர்கள் மாவீரர்கள்.

  யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி வேங்கடம் வேலுப்பிள்ளை – பார்வதி தம்பதிகளின் கடைக்குட்டியாக மேதகு வே. பிரபாகரனின் பிறந்தார். தமிழினம் வரலாறு காணாதவகையில் வீரத்தை நிலைநிறுத்தி தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் வழிகாட்டலில் புதிய புறனானூற்றைப் படைத்தவர்கள் எங்கள் மாவீரர்கள். இவர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திர சிற்பிகள், எமது மண்ணில் மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள். எமக்கு ஒரு நாடு வேண்டும் – எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் – எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும்– என்ற ஆக்கிரோசமான இலட்சிய வேட்கையுடனே, மாவீரர்கள் களத்தில் வீழ்ந்தார்கள். எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள்.

  ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் தமிழரின் வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். தமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். தமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள். போராட்ட விழுமியங்களைப் போற்றி உயிரொழுக்கக் கட்டுக்கோப்புடன் போராடி மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் விதையாகிப்போன இந்த மானமறவர்களை ஈன்றெடுத்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் என்றும் போற்றுதற்குரியவர்கள்.

  நம்மை நாம் நிர்வகிக்கின்ற, பாதுகாப்பும், இறைமையும் உள்ள ஓர் அரசகட்டமைப்பை நிறுவுவதே எமது மக்களின் அரசியல் வேட்கையாக இந்தப் போராட்டப் பயணத்தில் அறவழிப்போராட்டங்கள் அனைத்தும் அடக்குமுறையாளர்கள் முன்னால் அர்த்தமற்றுப்போன பின்னர் உலகில் நிகழ்ந்தேறிய, நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்வேறு விடுதலைப் போராட்டங்களைப் போலவே எமது இனவிடுதலைப் போராட்டமும் அதன் பரிணாம வளர்ச்சியில் ஆயுதப் போராட்ட வடிவத்தைக் கையிலெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி, உயிரைக்கொடுத்து, வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத பெருந் தியாகங்களைக் கொண்ட எமது விடுதலைப் போராட்டமும் முழுக்க முழுக்க நியாயமான காரணிகளின் அடிப்படையிலேயே தொடங்கப்பட்டது, நியாயமான வழியிலேயே நடாத்தப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக இந்த மாவீரர்கள் பட்ட துன்பங்கள்,துயரங்களை எவராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாதவை.

  அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக் கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எங்கள் மாவீரர்கள் என தெரிவித்துள்ளார். தமிழ்மக்களின் இன விடுதலைக்காகவே போராடினார்கள். ஆண்டாண்டு காலமாய் அந்நியரால் அடக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லற்பட்ட எமது மக்களின் விடுதலைக்காகவே போராடினார்கள். எமது மக்கள் தமது மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காகவே தமது உயிரைத் துச்சமென மதித்துப் போர் புரிந்தார்கள். எமது மக்களின் அரசியல் வேட்கையை அடையவே அவர்கள் போராடினார்கள்.

  அடக்கு முறையாளர்களுக்கு எதிராக எழுந்து நிற்பவர் மாத்திரமல்ல, தமிழர்கள் மதிப்போடும், மாண்போடும் வாழ, ஒரு தேசியத்தைக் கட்டியெழுப்பிட சிறந்த தலைவரின் வழிகாட்டலுடன் மக்களின் பேராதரவோடு தமிழர் ஒவ்வொருவரும் , தமிழர் மொழி, தமிழர் தேசம், தமிழ்த் தேசியம், தமிழர் பொருண்மியம், தமிழர் தொன்மம்மற்றும் தமிழர் பண்பாடு என்றவாறு மண் சார்ந்து தமிழின விடுதலைக் கோட்பாட்டை நோக்கி நகர்ந்தும் அதேவேளை இனவுணர்வின்பாற்பட்டுச் சிந்திக்கக் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கு வதற்கான பணிகளில் அறிவு, அனுபவம், நேர்மை, தொலைநோக்குத் திறன், பிரச்சனையை கையாளும் நேர்த்தி, போராளிகளின் மேல் கொண்ட அளவில்லா அன்பு தமிழீழ மண்ணையும், மக்களையும், உயிரை விட மேலாய் நேசித்த பக்குவம், மனித நேயப் பற்று, இனத்தின் மீட்புக்காக களமாடிய வீரத்தையும், தமிழனுக்கான அடையாளத்தினையும், ஒவ்வொரு வினாடியும் சிந்தித்த சிந்தனை, தன்னிகரில்லா தனிப்பெரும் படையாக உரிமைக்காகப் போராடிய வீரர்கள்.

  விடுதலைப்போரின் ஆரம்பகாலகட்டத்தில், களப்பலியான புலிவீரர்களின் உடல்கள் புதைத்தல், எரித்தல் என்ற இரு வகையாகவும் சிறப்பிக்கப்பட்டன. பேற்றாரின் மதநம்பிக்கை மற்றும் விருப்பத்திற்கு அமைவாகவும், போராளிகளின் வித்துடல்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்தன. பொது மயானங்களில் அப்போது போராளிகளின் வித்துடல்கள் தகனம் செய்யப்பட்டன. அல்லது நல்லடக்கம் செய்யப்பட்டன.

  போராட்ட காலத்தில் வீரச்சாவடைந்த வீரர்களின் வித்துடல்களை விதைக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. அவ்வாறு விதைக்கப்பட்ட வித்துடல்களுக்கு ஒரு தனிப்பட்ட வீரவரலாறு உண்டு. போர் நடந்த இடங்களில் கைவிடப்பட்ட, அல்லது விதைக்கப்பட்ட வீரர்களின் வித்துடல்கள் சாதகமான நிலை தோன்றிய பின்பு மீட்டெடுத்து, எடுத்துச்செல்லப்பட்டு மாவீரர்கள் துயிலும் இல்லமாக நிறுவப்பட்ட பிரதேசங்களில் வித்துடல்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி இங்கு விதைக்கப்படுகின்றன.

  தமிழீழத்தில் விடுதலையமைப்பின் இரகசியங்களைக் காப்பாற்றிட போராளிகள் அனைவருமே கழுத்தில் நஞ்சணிந்தார்கள். எந்தச் சூழ்நிலையிலும், எதிரிகளிடம் பிடிபடாமலும் ரகசியங்களைப் பாதுகாத்திடவும் இயக்கத்தைப் பாதிப்படையவிடாமல் நஞ்சருந்தி வித்தாகியவர்கள் பலர். எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக குண்டை வெடிக்கவைத்து வீழ்ந்த மாவீரர்களின் தியாகத்தால் எமது விடுதலை வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

  வீரப் பரம்பரையைத்தொடங்கிய முன்னோடியாய் 1982-ம்ஆண்டு கார்த்திகைத்திங்கள் 27-ம் நாளன்று தமிழீழ விடுதலைப்போராட்டப்பயணத்தில் முதல்வித்தாகிவீழ்ந்த லெப்ரினன்ட் சங்கர் வீரச்சா நாள் கார்த்திகை – 27 அன்றைய நாளை எமது விடுதலை வானை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுதந்திரச் சிற்பிகளை நினைவுகூரும் மாவீரர்நாளாகக் தலைவரினால் 1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.

  இந்திய வல்லாதிக்கத்தின் கண்களைத் திறப்பதற்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தாது விடுதலை மண்ணை முத்தமிடும் வரையிலான தியாகப் பயணத்தில் 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் மனக்கட்டுப்பாட்டுடன் இருந்து தமிழ் பேசும் மக்களின் விடுதலைத் தீயைக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தி தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அகிம்சையின் உச்சத்தை உலகறியச் செய்தார்.

  தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக ‘சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது எனக் கடிதம் எழுதி வைத்தார். பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு உறுதிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 1988 சித்திரை 19நாள் அன்று தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்து வித்தாக மண்ணை முத்தமிட்டார் அன்னை பூபதி.

  சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு தமிழ் மக்களின் போராட்டத்தின் முதலாவது தற்கொலை போராளியாக தனது உயிரை கொடுத்து ஆயுத போராட்டத்திற்கு ஆரம்ப கர்த்தாவாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரனின் உட்பட தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்து 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்திட சண்டை கடுமையாக நடத்திட சீறும் ரவைகளின் ஒலியும் அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றிட விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரராக 2 ஆம் லெப் மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து தமிழீழத்தின் முதல் பெண் மாவீரராக வரலாற்று சாதனை படைத்தார்.

  கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்திட 1987 சூலை 5 நாள் அன்று சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. கரும்புலி கப்டன் மில்லர் முதலாவது கரும்புலியாகவும் புலிகளின் முதலாவது தற்கொடைப் போராளி என்ற வரலாற்றைப் படைத்தார். 06-10-1997 அன்று கரும்புலி மேஜர் யாழினியுடன் மற்றும் கரும்புலி மேஜர் நிதன், கரும்புலி கப்டன் சாதுரியன், வீரகாவியமாகிட முதல் பெண் தரைக் கரும்புலி என்ற பெருமையை எமது நாட்டில் நிலை நாட்டி வீட்டிற்கு இரண்டாவது மாவீரராக சாதனை படைத்தவர் முதல் பெண் தரைக் கரும்புலி என்ற இந்த பெருமைக்குரியவர் மேஜர் யாழினி.

  1990 ஆடி 10ம் நாள் அன்று வல்வெட்டித்துறை கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் ‘எடித்தாரா’ மீதான கரும்புலித் தாக்குதலில் முதாலாவது கடற்கரும்புலிகளில் மேஜர் காந்தரூபன் கப்டன் கொலின்ஸ் கப்டன் வினோத் ஆகியோர் வீரச்சாவடைந்து தமிழீழத்தின் முதல் கடற்கரும்புலி என்ற வரலாற்றை படைத்தார்கள். ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று 1994 ஆவணி 16 ம் நாள் அன்று அதிகாலை 12.35 மணியளவில், காங்கேசன்துறை துறைமுகத்திற்குள் ஊடுருவி அங்கு தரித்து நின்ற கண்காணிப்புக் கப்பலைத் தகர்த்த முதற் பெண் கடற்கரும்புலியாக கடற்பரப்பில் காற்றோடு கலந்த கப்டன் அங்கயற்கண்ணி விடுதலைக்காக தன்னையும் சரித்திரமாக்கினாள்.

  இவர்களின் தாயகப் பணியைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான வீரர்கள் தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடி தம் இன்னுயிர்;களை ஈகம் செய்த மாவீரர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் தமிழ் மக்களின் விடுதலை வீரர்களாகவும் புனிதர்களாகவும் போற்றப்படுவார்கள். ஒருவிடுதலை வீரனின் சாவின்பின்னால் நீண்டவரலாறு இருக்கின்றது என்ற எமது தேசியத்தலைவரின் சிந்தனைத்துளிக்கு உண்மையான உருவகம் கொடுத்து தமிழ்த்தேசிய இனத்தின் அடிமை இருள் அகற்ற உதித்த வித்தியாசமான அபூர்வமான பிறவிகள் குறிக்கோளை அடைவதற்குத் தன்னை அழிக்கவும் தயாராகும் அழித்துக்கொண்ட ஆயிரமாயிரம் வீரர்கள் தமிழீழ விடுதலைப்பயணத்தை வீச்சாக்கியுள்ளார்கள் எமது மாவீரச்சொந்தங்கள்.

  தமிழீழத்தின் மிகப் பெரிய எழுச்சி நிகழ்வு என்ற சிறப்பு மாவீரர் நாளுக்கு உண்டு. 1990ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை, நவம்பர் 21 தொட்டு 27 வரையிலான ஒருவாரம் மாவீரர் வாரமாக சிறப்பிக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25, 26, 27 ஆம் நாட்கள் மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. 1994ஆம் ஆண்டு தொட்டு, மாவீரர் நாள் நள்ளிரவில் இருந்து, மாலை 6.05 மணிக்கு மாற்றப்பட்டது. முதல் மாவீரன் லெப். சங்கர் வீரச்சாவடைந்த நேரமும் அதுவாகும். இதற்கு முன் தலைவரின் மாவீரர் நாள் உரை அமையும். மாவீரர் உரை முடிந்ததும் 6.05 மணிக்கு தமிழீழம் எங்கணும் அனைத்துத் தேவாலய மணிகளும் ஒரு நிமிடம் மணியெழுப்பும். அதன் பின் அகவணக்கம் செலுத்தப்படும். மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவற்றிலும் ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றோர் உரித்தாளர்கள் போன்றோரால் சுடர் ஏற்றப்படும். துயிலும் இல்லத்தின் நடுமேடையிலும் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்படும்.

  போரியல் வரலாற்றில் பல வீரத்தளபதிகளும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். பல வியக்கத்தக்க மகத்தான போரியல் சாதனைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்தது. போர்க்குணம் மிக்க தமிழரின் விடுதலையை நெஞ்சில் சுமந்து மாண்ட மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் கட்டும் வேலைகள் 1990 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கினாலும் 1991-ஆம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக துயிலும் இல்லத்தினை வரைந்து மாதிரி செய்து கொண்டிருந்தார். அதன்படியே கட்டுமானப் பணிகளை போராளிகள் மக்கள் என அனைவரும் ஆரம்பித்தனர். துயிலும் இல்லம் என்ற சொற்றொடர் தமிழீழ விடுதலைப்புலிகளே உரித்துடையது.

  தமிழ் இனம் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற சிந்தனையுடன் தேசியத்தலைவர் தமிழ் இனத்திற்கு என்று உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப்பெற்றது.

  வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்கள் பரிணாம வளர்ச்சிப் பாதையில் தமிழீழ தேசியக் கொடி தமிழரின் விடுதலைத் தாகத்தினை உலகிற்கு எடுத்துக்காட்டியது. புலிகளின் கட்டமைப்புக்குள் வாழ்ந்த மக்கள் கலாச்சாரம், பண்பாடு, தமிழரின் பாரம்பரிய விழுமியங்களைக் கட்டிக்காத்து மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களை மறுக்க, மறைக்க முடியாத வரலாற்று உண்மை. மக்களை அணைத்திடும் தமிழீழ தேசியக்கொடி பற்றியும் அதனை பயன்படுத்திடும் முறைகள் பற்றிய பயன்பாட்டுக்கோவை விடயங்களையும் தாங்கி உள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

  முதலாது துயிலும் இல்லம், கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில், போராளிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டதோடு, எரிக்கப்பட்டும் வந்தன. 1991இல் வித்துடல்கள் எரிக்கப்படமாட்டாது, விதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுபற்றி 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏடு, மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில், இப்போது மாவீரர்கள் விதைக்கப்பட்டு, இங்கே கல்லறைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இம்முடிவானது, போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வித்துடல்கள் புதைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டபின், முதன்முதலான கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில், 1991 ஆம் ஆண்டு ஆடி மாதம் 14நாள் விதைக்கப்பட்டது.

  இவ்வாறு அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட இல்லங்களில் ஏற்கனவே சண்டை நடந்த இடங்களில் விதைக்கப்பட்ட மாவீரர்களை அகழ்ந்தெடுத்து புதிய இல்லங்களுக்கு கொண்டுவரும் முடிவுகளும் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய இராணுவக் காலப்பகுதியில் சண்டைகளில் வீரச்சாவடைந்த அந்த இடங்களிலேயே விதைக்கப்பட்ட மாவீரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கோப்பாய், வடமராட்சி, மற்றும் வன்னி ஆகிய இடங்களில் துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டனர். ஆரம்பத்தில் பிராந்தியங்களுக்கு ஒரு துயிலும் இல்லமாக இருந்து பின்னர் மாவட்டங்களுக்கு ஒன்று என விரிவாக்கபட்டது. பின்னர் மேலும் பல இல்லங்கள் பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டது. வித்துடல் கிடைக்காமல் போனால், நினைவுக்கற்கள் நாட்டும் வழமை, உண்டு. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலும் இல்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலும் இல்லத்திலும், வைப்பது இன்னுமொரு வழமையாகும்.

  வீரப்போர் புரிந்த தமிழ் மறவர்கள் புதிய சமுதாயத்தின் முன்னோடிகளாக வாழ்ந்து காட்டி, ஏற்றத்தாழ்வுகளற்ற, சமூகநீதி நிலவும் சமுதாயமொன்றைத் தமிழர் தாயகப்பகுதியில் கட்டியெழுப்பும் தேசச்சிற்பிகளாகச் செயற்பட்டார்கள். பயிற்சி – தந்திரம் – துணிவு – வெற்றி என சத்தியம் சாட்சியாக, வரலாறு வழிகாட்டியாக துணிந்து போராடிய புலிகளைப் பார்த்துப் உலகமே பெருமிதம் கொள்ள இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்ற வரலாற்றைப் படைத்து களப்பலியான மாவீரனின் வித்துடல் கிடைக்கப்பெற்றதும், அது ஓரிடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பதனிடப்பட்ட அந்த வித்துடலுக்கு சீருடை அணியப்படும். அதே நேரத்தில் அந்த மாவீரனுடைய விபரங்கள் உறுதிசெய்யப்பட்டு, அவர்களிகன் சுயவிபரக் கோவைக் கோப்பின் அடிப்படையில் அவர்கள் பங்குகொண்ட களச்சமர்கள் சேவை காலம் தேசப் பணிகள் உட்பட பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு அணித் தலைவர் பொறுப்பாளர் போர்முனைக் கட்டளைத் தளபதி உட்பட அவர்களின் இராணுவ நிர்வாக அலகுடன் தொடர்புடையவர்களின் அறிக்கையிடலின் பிரகாரம் தலைமைச் செயலகத்தின் ஊடாக தலைவரின் அனுமதி பெறப்பட்டு மாவீரர் பணிமனை ஊடாக பதவி நிலை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

  வித்துடல் பேழையில் வைக்கப்பட்டு. மாவீரர் பெயரும் பதவிநிலையும் பேழையில் பொறிக்கப்பட்டு மாவட்ட அரசியல்த் துறையூடாக பிரதேச மற்றும் படையணி அல்லது பிரிவுப் போராளிகளினால் வித்துடல் அடங்கிய பேழை இராணுவ மரியாதையுடன், பெற்றோர் அல்லது உறவினர் வீட்டுற்கு எடுத்துச் செல்லப்படும். வீட்டு வணக்க நிகழ்வுகள் முடிந்தபின், வீரவணக்க நிகழ்விற்காக வித்துடல் ஒரு பொது மண்டபம் அல்லது மாவீரர் மண்டபத்திற்கு அல்லது அவர் கற்ற பாடசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொது மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு .அதன்பின் வீரவணக்கக்கூட்டம் நடாத்தப்பட்டு. முதற்கண் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு. அடுத்ததாக ஈகைச்சுடர் பின்பு வித்துடலுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு. பெற்றோர் மனைவி கணவன் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு. இறுதியாக இராணுவ மரியாதையுடன் வாண்ட் வாத்தியங்கள் இசைத்திட வித்துடல் துயிலும் இல்லத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளில் இராணுவ மரியாதையுடன் சோகை இசையுடன் எடுத்துச் செல்லப்படும்.

  துயிலும் இல்லப் பகுதியை அண்மிக்க இசை நிறுத்தப்பட்டு நிசப்த அமைதி நிலவும் அப்போது துயிலும் இல்லங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் துயிலும் இல்லத்தின் உள்ள விசேட பீடத்தில் வைக்கப்பட்ட பேழையும், வித்துடலும் மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் வைக்கப்பட்டு. மலர்மாலை, மலர்வணக்கம் செலுத்தப்பட்டபின், அகவணக்கம் செலுத்தப்பட்டு. நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டு. அங்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு உறுதிமொழி வாசிக்கப்பட்ட பின், இராணுவ மரியாதை வேட்டு தீர்க்கப்பட்டு. அனைவரும் அகவணக்கம் செலுத்திட வித்துடல் புனித விதைகுழிக்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டு விதைக்கப்பட அனைவரும் கைகளால் மண்ணெடுத்து, விதைகுழியில் போட்டு வித்துடல் துயிலும் இல்லங்களில் விதைக்கப்படும். நினைவுக்கல் நாட்டும் நிகழ்விற்கும், இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. நினைவுக்கல் நிகழ்வில் மாவீரனின் படம் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டபின் உரித்தாளரிடம் கொடுக்கப்படுகிறது. வழமையும் இருந்துள்ளமை குறிப்பிடத் தக்கது .

  தமிழர்கள் தமது தாயகத்தில் தாமும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் துரோகத்தனங்களாலும் தமிழர்களின் நிலைத்திருப்பு மீது பொறாமை கொண்ட சில நாடுகளின் பெரும் பலத்துடன் பேரினவாதிகளால் ஈழப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டு தமிழர்களின் தாயகக் கனவுடனான தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை பாரிய பின்னடைவிற்கு இட்டு செல்வதன் ஊடாக தனி ஈழக் கனவினை தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அழித்து விடலாம் என என்னியது.

  தமிழரின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் விடுதலை புலிகளால் மாவீரர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த 27 பிரத்தியேக மாவீரர் துயிலும் இல்லங்களில் 1989ஆம் ஆண்டு முதல் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வந்த போதிலும் 2008ம் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்காலத்தில் 06 மாவீரர் நினைவுத் தடங்கள் (துயிலும் இல்லங்கள்) தற்காலிகமாக அமையப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும். மொழியாகி எங்கள் மூச்சாகி முடிசூடும் தமிழ் மீது உறுதி என்ற பாடல் முதலாவதாக இது 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களினால் எழுதப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

  மாவீரர்கள் விபரம்

  2008ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் மாவீரர் எழுச்சி நாள் தமிழீழ் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் எழுச்சி நாள்ஆகும். எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை -27. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை அந்த வருடத்தின் அக்டோபர் 31ம் திகதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை அறிவித்திருந்தது. இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர். கரும்புலிகள் 372 இவர்களில் தரைக் கரும்புலிகள் 113 மற்றும் கடற்கரும்புலிகள் 259 உள்ளடங்குகின்றனர். எல்லைப்படை மாவீரர்கள்- 281 இதில் பெண்கள்-05 , ஆண்கள்-276 ஆகும் . காவற்து மாவீரர்கள் – 50 இதில் பெண்கள்-03 ,ஆண்கள்-47 ஆகும் . மாமனிதர்கள் -19 மற்றம் நாட்டுப்பற்றாளர்கள்-480 இதில் பெண்கள்-28, ஆண்கள்-452 ஆகும் (31-10-2008 மாவீரர் பணிமனை மாவீரர் நாள் விரிப்பு) 31-10-2008 முதல் 27-11-2008 வரை 276 மாவீரர்கள் உள்ளடங்களாக 2008 மாவீரர் எழுச்சி நாள் வரையில் 22390 மாவீரர்கள் எனப் பதிவுகள் சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்கால இடப்பெயர்வு காரணமாக தற்காலிக நினைவுத் தடங்களாக மேலும் துயிலும் இல்லங்கள் 2009ஆம் ஆண்டு பங்குனி மாதம் இறுதிவாரம் வரை 6 தற்காலிக மாவீரர் நினைவுத்தடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையப்பெற்றது. அதற்கு பிட்பட்ட காலப் பகுதியில் போராளிகள் வீரச்சாவடைகின்ற இடங்களில் மாவீரர்கள் வித்துடல்கள் விதைக்கப்பட்டது. வீரச்சாவடையும் மாவீரர்களின் எண்ணிக்கை பல ஆயிரக்கணக்கில் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளலாம்.

  2009ம் மே ஆயுதப் போரட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில்; தமிழீழ இலட்சியத்திற்காக தமது உயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கான அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்கள் வித்துடல் விதைக்கப்பட்ட கல்லறைகள், நினைவுக்கற்கள் என்பனவற்றை பௌத்த சிங்கள பேரினவாத அரசின் இராணுவத்தினாலும் கைக்கூலிகளினாலும் பாரிய இயந்திரங்கள் கொண்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைத்தழிக்கப்பட்டுள்ளதையும் மாவீரர் துயிலும் இல்லங்களின் மேல் இராணுவ முகாம் அமைத்திருப்பதையும் காணும் போதெல்லாம் இதயம் பிழந்து அழுது புலம்பி கண்களில் கண்ணீர் முட்டி வழிகிறது.

  இனத்தின் விடுதலைக்காய் மகத்தான தியாகங்களைப் புரிந்து ஈழப் போரிலே தம்முயிர்களை ஈந்த காவிய நாயகர்கள் தமிழீழம் என்னும் புனிதக்கனவுடன் சந்தனப் பேழைகளில் உறங்கிடும் என் மாவீரர் தெய்வங்களை நினைவு கூருகின்ற உன்னதமான நாளில் தேசியத்தலைவர் ஆற்றும் உரையினைக் கேட்பதற்கு 1989ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுவரை சர்வதேச நாடுகளும் காத்திருந்தார்கள். புவிசார், பொருளாதார – அரசியல் நலன்களுக்காக மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டம் உலகநாடுகள் சிலவற்றால் பந்தாடப்பட்டு, பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, உலக வல்லரசுகளினதும் பிராந்திய ஆதிக்க சக்திகளினதும் பகடை விளையாட்டுக்கு பலியாகிட ஈற்றில், மானுட வரலாற்றின் மிகப்பெரும் மனிதத் துயரோடு எமது ஆயுதவழிப் போராட்டத்தை நசுக்கிட முனைப்புடன் செயற்படத் தொடங்கியது.

  இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி, உயிர்க் கொடை கொடுத்து, வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத மாபெருந் தியாகங்களைக் கொண்ட தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா இராணுவத்துடன் மட்டும் நடைபெறவில்லை. 30 இற்கு மேற்பட்ட சர்வதேச வல்லரசு நாடுகளின் பாரிய படை பலமும் நவீன தொழிநுட்பத்துடன் ஒருவிடுதலை இயக்கம் இனவிடுதலைக்காய் போராடி இருந்தது. 2009 மே முள்ளிவாய்க்கால் என்னும் துண்டு நிலத்தில் மிகப்பெரும் மனித அவலங்களையும், மானிடத்திற்கு எதிரான குற்றங்களையும் நிகழ்த்தி ஒரு இனப் படுகொலையினை சிறீலங்கா அரசு நிகழ்த்திட பேரிழப்புக்களால் பெரும் பின்னடைவைச் சந்தித்த தழிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனித்துப் போக முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்ற சிங்களத்தின் எதிர்பார்ப்பு பகற்கனவாகியிற்று.

  காலங்கள் உருண்டோடிட எமது எழுச்சியும் மங்கித்தான் போகிறது. ஈழத்தில் அங்கே சாட்சிகளும் அழிக்கப்படுகிறது, அபிலாஷைகளும் நொறுக்கப்படுகின்றது, இன்று இராணுவ ஆக்கிரமிப்புக்குள் தமிழீழ தேசம் விழுங்கப்பட்டதனால் அங்கு உள்ள மாவீரர்துயிலுமில்லங்களும் ஈழப்போராட்ட வரலாற்றுசான்றுகள் அனைத்தையும் திட்டமிட்டு உலகப் பொது வழக்கங்களுக்கும் இராணுவவிழுமியங்களுக்கும் மாறாக சிங்களப் பேரினவாத அரசு கல்லறைகளையும் நினைவுத்தடங்களையும் இடித்தது மனித நாகரிக விழுமியங்களுக்கு மிகப் பெரிய அவமானத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. திட்டமிட்டு வரலாற்று ஆவணங்களை சிதைப்பதும் கால வரலாறுகளில் தமிழினத்தின் அடையாளங்களையும் இல்லாது ஒழிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது இந்த செயலுக்கு சிங்கள தேசம் என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

  விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பதினொரு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் எமது மக்களின் அரசியல் வேட்கைகள் குறைந்தபட்சமேனும் நிறைவேற்றப்படவில்லை. அடிப்படை நிர்வாக முறைகளில் எமது தமிழ்மக்களுக்கான உரிமைகள் பேணப்படவில்லை. மாறாக சிங்களப் பேரினவாத அரசின் இனவழிப்பு தொடர்ந்தவண்ணமேயுள்ளது. காணிப்பறிப்புக்கள் தொடங்கி நிர்வாக உரிமைப்பறிப்புக்கள் வரை பேரினவாத பூதம் தமிழ்மக்களை நித்தமும் வதைத்துக்கொண்டே இருக்கின்றது.

  அரசியற்கைதிகள், தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்களும் விடுதலை செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலைமை துன்பகரமாகவே ஒவ்வொரு நாளும் நகர்கின்றது. தான் நினைத்த நேரத்தில் யாரையும் கைது செய்யலாம், எவ்வழக்கின் கீழும் தண்டிக்கலாமென்று தான்தோன்றித்தனமாகவே இராணுவம் மற்றும் புலனாய்வு பொலிஸ் என அரச கட்டமைப்பு இயங்குகிறது அரச இயந்திரம் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை தொடர்பில் காட்டப்பட்டுவரும் மௌனத்தைப் பல்லாண்டுகளாக எதிர்கொண்டுவரும் அவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருநாளும் வதைபட்டுக்கொண்டே வாழ்கின்றனர். திட்டமிட்ட வகையில் சமூகக்குற்றங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்மக்களின் அன்றாட வாழ்வியல்முறை சீரழியவிடப்பட்டுள்ளது. எமது மக்களின் அன்றாட வாழ்வில் படையினரின் தலையீடு எல்லாவழிகளிலும் அவர்களை அச்சுறுத்துகின்றது.

  அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், எப்போது எமது விடுதலை வீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்குப் போவோம் என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு நவம்பர்- 27ஐயும் எதிர்பார்த்து எதிர்பாரத்து தமிழர்கள் ஏங்கித் தவித்தார்கள். தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்த மஹிந்த ராஜபக்ச அடக்குமுறை அடாவடி ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் மேல் இராணுவ முகாம் அமைந்திருந்த இராணுவம் சில மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து விலகிச் சென்றது. கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் 7 வருடங்கள் கழித்து கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 27 மாவீரர் நாள் அன்றைய தினம் தற்துணிவாக மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தால் சிதைத்தழிக்கப்பட்ட மாவீரர்களது கல்லறைச் சிதறல்கள் உள்ள இடங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்குச் வணக்கம் செலுத்தியிருந்தார்கள்.

  தாயகத்தில் மாவீரர்களின் எந்தவொரு அடையாளச் சின்னத்தையும் இல்லாமல் செய்து விடுவதில் சிங்களப் பேரினவாதம் காட்டிடும் முனைப்பு. 2020ஆம் ஆண்டு ஈழத்தில் மாவீரர்களை நினைவு கூறுவதற்கு சிங்களப் பேரினவாதம் அனுமதிக்கப் போவதில்லை. எதிர்வரும் காலங்களில் எவ்வாறு நிகழப் போகிறது என்பதை காலம் தான் உணர்த்திடும் இந்த நிலையில் மாவீரர்களை நினைவு கூறும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் மானத்தமிழ் மக்களிடம் தான் உள்ளது. மாவீரர்களின் வரலாற்றைக் கட்டிக் காப்பது தொடக்கம் மாவீரர் நாள் பாரம்பரியங்களையும் பழமையும் அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பும் இவர்களிடையே உள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்திட வேண்டும். எதிரியானவன் களத்தில் அரக்கத்தனமான வேலைகளை செய்யும் அதேவேளையில் புலத்திலும் பல நாசகார வேலைகளைச் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளான். சில ஈனத் தமிழர்களும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் அவனுக்கு விலைபோய் விட்டார்கள்.

  புலம்பெயர் தேசத்தில் நடைபெற்றும் தேசிய நிகழ்வுகளையும், நடைமுறைப்படுத்தும் அமைப்புக்களையும், விமர்சிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் புலம்பெயர் தேசத்தில் தேசிய நிகழ்வுகள் எவ்வாறு நடைபெற்று, அதன் வரவு செலவு என, அனைத்து விடயங்களையும் பார்ப்பதற்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு இருந்திருக்கின்றது. அதனை இவ்விடத்தில் கூறுவதற்கு நான் பொருத்தமற்றவன். 2009 ஆம் பிற்பட்டகாலப்பகுதிகளில் எவ்வாறு இவைகள் நிகழ்கின்றது . மாவீரர்கள் போராளிகள் சமூகநலன் பேணும் புலம்பெயர் அமைப்புக்கள் மீண்டும் கலை ,களியாட்டம் நிகழ்வுகள். மூலம் பணச் சேகரிப்பில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது. பெறப்பட்ட முழுத்தொகையும் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்தார் பல அமைப்புக்கள் கண்துடைப்பு வேலைகளை மட்டும் செய்கின்றார்கள். உணர்வு பூர்வமான ஈடுபாடுகள், சிலரின் சுயநல விருப்பங்களுக்காக பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு இதனால் புலம்பெயர் தமிழ் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

  முள்ளிவாய்க்காலில் எல்லாத்தையும் இழந்து சிறைபிடிக்கப்பட்டு எஞ்சிய தமிழர்கள் மனங்களில் தமது விடுதலைக்காகப் போராடிய புனிதர்களான மாவீரர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைத்தழிக்கப்பட்டுள்ளதைக் காணும் போதெல்லாம் அவர்களது இதயங்கள் அழுது புலம்பின கண்களில் கண்ணீர் முட்டி வழிந்திட புரத்தில் மாவீரர் நினைவு எழுச்சி நாள் நிகழ்வுகளை தமது ஆடம்பர களியாட்ட நிகழ்வுகளை ஒரு நாட்டிலே ஒன்றிற்கும் மேற்பட்ட பிரிவுகளாக நிகழ்த்துவதும் மாவீரர் நாள் அன்று தமிழிழ விடுதலைப் புலிகள் தமிழீழம் என்று அறிக்கை எழுதுவதில் முனைப்புக் காட்டும் புலம் பெயர் அமைப்புக்கள் அதிகம் என்றால் மிகையாகாது. அதுமட்டுமன்றி தமிழீழத் தேசியக்கொடியில் மாற்றங்கள் விடுதலைப் புலிகளின் ஊடகத்துறைக்கு சொந்தமான ஆவணங்கள் புதிய ஊடகங்களினதும் தனிநபர்களினதும் பெயர்களும் இலச்சனைகளும் பொறிக்கப்பட்டு வலம் வருவதும் தேசிய மாவீரர் எழுச்சி நாளை உரிய முறைகளில் கடைப்பிடிக்காது ஒரு வரையறைகள் அற்று நிகழ்வுகளை நடத்துவதும். ஈழ விடுதலை தொடர்பாக 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் அமைக்கப்பட்ட அமைப்புக்கள் மக்கள் நலனை மறந்து தங்கள் சுயநலனுக்காக இயங்குவதும் கவலைதரும் விடயம்.

  விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பு போரில் இறந்த வீரர்களை வணங்குகின்றமுறை. அந்த வகையில் தாயக விடுதலைக்காகப் போராடி வீழ்ந்தவீரர்களைக் கல்லறைகளில் இட்டு, நினைவுக்கல்லறைகளிலும் நினைவுத்தடங்களிலும் அவர்களின் ஞாபகார்த்தமாக கிராமங்களில் உள்ள சமூக அமைப்புக்களும் கல்விக்கூடங்களும் மாவீரர் எழுச்சி நிகழ்வுகளும் நாடத்தப்பட்டு வருகின்றன இந்த மாவீரர் நாளின் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு தமிழீழ மாவீரர் பணிமனையால் உருவாக்கப்பட்ட மாவீரர் நாள் கைநூலில் பல விடயங்கள் குறிப்பிடப் பட்டுள்ளது.

  ஈழத்து உறவுகளின் நலனுக்காக அமைப்புக்கள் சேகரிக்கும் பணத்திற்கான வெளிப்படுத்தல் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.தமிழ்மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இந்த மாவீரர்களைக் காலம் காலமாக நினைவு கூர்ந்து பூசிக்க வேண்டியது தமிழர்களாய் பிறந்த அனைவரினதும் கடமை. இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக தமிழரின் இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு லட்சியவாதி. ஓர் உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய விடிவுக்காகவும் விமோசனத்திற்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன் வாழ்க்கை உன்னதமானது அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத லட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான். எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று தலைவர் பெருமிதத்துடன் கூறினார் . இவரின் கூற்று பொய்யாகிவிடக் கூடாது.

  மறுபுறத்தில் எமது மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டங்களைத் தொடர்ந்த வண்ணமே உள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியற் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு என பலதரப்பட்ட தளங்களில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியல் யாப்பு என்ற வடிவத்தை நோக்கி பேரினவாத அரசு நகர்ந்து வந்திருக்கின்றது. தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் வேட்கையை நிறைவு செய்யாத, பேரினவாத சக்திகளிடமிருந்து எவ்வித பாதுகாப்பையும் தமிழருக்கு வழங்காத இந்த அரசியல் யாப்பைத் தமிழ்மக்களின் ஆதரவோடு நிறைவேற்றிவிட மிகப்பெரிய சதித்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தமிழ்மக்களின் நியாயமான அரசியல் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் சிங்களப் பேரினவாத அரசின் இந்த நிகழ்ச்சி நிரலிற்கு தமிழ்த் தலைவர்கள் என்று கூறுபவர்கள் பலியாகிவிட்டனர். நெருக்கடி நிறைந்த இந்தச் சூழலில் சுயலாப அரசியல் சக்திகளையும் அரசியல் சந்தர்ப்பவாதங்களையும் இனங்காணத்தவறினால் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்து வருகின்றார்கள்

  சிறீலங்கா இனவாத அரசினால் எமது வரலாற்று நினைவிடங்களையும், இணையங்களில் வெளிவரும் வரலாற்று ஆவணங்களையும் இல்லாது அழிப்பதில் முனைப்புடன் செயற்பட்டுவந்தாலும் விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அகற்ற முடியாது. தமிழன் மலையாக எழுந்து நிமிர்ந்து தேசிய எழுச்சிக்கு மூச்சாகி நின்ற மாவீரச்செல்வங்களின் ஈகம் ஈழவிடுதலைக் காவியத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு மாவீரர் சுவடுகளும் நெருப்புவரிகளால் எழுதப்பட வேண்டியவை. மாவீரர்களின் அளப்பரிய ஈகத்தின் ஆத்மசக்தியே இன்றளவும் உலகம் வாழ் தமிழர்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. அச்சக்தியே தமிழின அழிப்பின் மீதான உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போக வில்லை.

  தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களில் குறிப்பாக 2009ஆம் ஆண்டு 1,46,679. பொது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.

  விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டமானது அரசியல்ரீதியாகவும் அமைதிவழியிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் வீச்சுப்பெற்றுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தழிழ் சமூகம், மாவீரர்களின் உயிர்த்தடங்களில் தமிழீழத் தேசித்தலைவர் அவர்களின் சிந்தனை வழியில் மாவீரர்களின் இலட்சியக் கனவுகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உள்ளது.எமது தாயக விடுதலையை நாம் பெறுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.

  தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

  – நிலவன்.

  https://www.uyirpu.com/?p=17689

  Tamil Mahan replied 1 year, 9 months ago 1 Member · 0 Replies
 • 0 Replies

Sorry, there were no replies found.

Log in to reply.